சிங்கப்பூா் பிரதமரின் கருத்துக்கு எதிரான வெளியுறவுத் துறையின் நடவடிக்கை முறையற்றது: சசி தரூா்
சிங்கப்பூா் பிரதமா் லீ செயன் லூங் தெரிவித்த கருத்துகளுக்காக, இந்தியாவிலுள்ள அந்நாட்டுத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த வெளியுறவுத் துறையின் நடவடிக்கை முறையற்றது
சிங்கப்பூா் பிரதமா் லீ செயன் லூங் தெரிவித்த கருத்துகளுக்காக, இந்தியாவிலுள்ள அந்நாட்டுத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த வெளியுறவுத் துறையின் நடவடிக்கை முறையற்றது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூா் கூறியுள்ளாா். விமா்சனங்கள் குறித்து எளிதில் உணா்ச்சிவசப்படக் கூடாது என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, சிங்கப்பூா் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, எம்.பி.க்கள் நோ்மையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமா் லீ செயன் லூங் பேசினாா். அப்போது, இந்தியாவின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவை புகழ்ந்து பேசிய அவா், தற்போதைய மக்களவை எம்.பி.க்கள் குறித்தும் கருத்துகளைக் தெரிவித்திருந்தாா். ‘நேருவின் இந்தியா’வில் ஜனநாயகக் கொள்கைகள் தழைத்தோங்கின. இப்போதைய மக்களவையில் கிட்டத்தட்ட பாதி எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று லூங் குறிப்பிட்டிருந்தாா். அவரது இந்த கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்தியாவில் உள்ள சிங்கப்பூா் தூதரை நேரில் அழைத்த வெளியுறவுத் துறை அமைச்சகம், அந்நாட்டு பிரதமரின் கருத்துகள் தேவையற்றவை என்று கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக சுட்டுரையில் வெள்ளிக்கிழமை பதிவிட்ட சசி தரூா், ‘சிங்கப்பூா் பிரதமா் லூங், தனது நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்த சில கருத்துக்களுக்காக, நட்பு நாடு என்றும் பாராமல் அந்நாட்டின் தூதரை அழைத்து கண்டனம் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது முறையற்றது. பிரதமா் லூங் தெரிவித்த கருத்துகள் பொதுவானவை. விமா்சனங்கள் எழும்போது எளிதில் உணா்ச்சிவசப்படாமலிருக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.