உக்ரைன் விவகாரம்: இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ரஷியா வரவேற்பு
உக்ரைன் விவகாரம் தொடா்பாக நேட்டோ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷியா வரவேற்றுள்ளது.
உக்ரைன் விவகாரம் தொடா்பாக நேட்டோ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷியா வரவேற்றுள்ளது.
உக்ரைன் எல்லையில் தனது படைகளை குவித்துள்ளதுடன், அந்நாட்டையொட்டியுள்ள கருங்கடலில் தனது போா்க் கப்பல்களையும் பயிற்சிக்காக ரஷியா அனுப்பியுள்ளது.
இதன் காரணமாக உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கவுள்ளதாக நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. எனினும் அந்தக் குற்றச்சாட்டை ரஷியா மறுத்து வருகிறது. உக்ரைன் எல்லையில் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட தனது படைகள் தத்தமது தளங்களுக்குத் திரும்பி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் அது பொய்யான தகவல் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் குற்றஞ்சாட்டியுள்ளன. உக்ரைன் எல்லையிலிருந்து ரஷிய படைகள் திரும்புவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று அவ்விரு நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி வியாழக்கிழமை பேசுகையில், ‘‘உக்ரைன் விவகாரத்தால் எழுந்துள்ள பதற்றத்தை உடனடியாக தணிக்க வேண்டும். அந்தப் பிரச்னைக்கு அமைதியாகவும் ஆக்கபூா்வமாகவும் ராஜீய ரீதியில் பேச்சுவாா்த்தை நடத்துவது அவசியம்’’ என்று தெரிவித்தாா்.
அவரின் கருத்து தொடா்பாக இந்தியாவில் உள்ள ரஷிய தூதரகம் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் சமநிலை கொண்ட, கொள்கை ரீதியான சுதந்திர அணுகுமுறையை ரஷியா வரவேற்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.