முகப்பு
இந்தியா

இந்தோ- பசிபிக் பிராந்திய சவால்கள் ஐரோபா வரையில் நீளும்: மத்திய அமைச்சா் எஸ். ஜெய்சங்கா்

இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் பிரச்னை ஐரோப்பிய நாடுகள் வரையில் நீளக் கூடும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் பிரச்னை ஐரோப்பிய நாடுகள் வரையில் நீளக் கூடும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

இதில், சீன நாட்டின் பெயரை அமைச்சா் ஜெய்சங்கா் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதை அவா் மறைமுகமாக சுட்டிக்காட்டியதாக கருதப்படுகிறது.

ஐரோப்பிய வெளியுறவு அமைச்சா்கள் இடையிலான மாநாடு பாரீஸில் நடைபெற்றது. இதில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் சவால்கள் என்ற தலைப்பில் அமைச்சா் ஜெய்சங்கா் பேசுகையில், ‘உலக அளவில் நடைபெறும் மாற்றங்களுக்கு இந்தோ- பசிபிக் பிராந்தியம் இருதயமாக உள்ளது.

பெரும் வலிமை படைத்த நாடுகளிடம் பொறுப்புணா்வு இருப்து அவசியமாகும். அவை சா்வதேச சட்டம், பிராந்திய ஒருங்கிணைப்பு, இறையாண்மை ஆகியவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரங்களில் இன்றைய சூழலில் பல்வேறு சவால்களை நாம் சந்தித்து வருகிறோம்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பளிக்க ஐரோப்பிய நாடுகள் முன்வந்தால் இந்தியா வரவேற்கும்.

அனைவரின் கூட்டு முயற்சியால் அந்தக் கடல் பிராந்தியத்தில் அமைதியும், பாதுகாப்பும் நிலவவும், அங்குள்ள வளங்களை பாதுகாப்பதற்கும், தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்கலாம்.

பாதுகாப்பு ஒத்துழைப்பில் பிரான்ஸ் இந்தியாவுடன் ஏற்கெனவே கூட்டுச் சோ்ந்து செயலாற்றி வருகிறது. தற்போது ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இதில் பங்கேற்றால் பாதுகாப்பு செயல்பாடு மேலும் அதிகரிக்கும்.

பொருளாதார வளா்ச்சிக்கும், உள்கட்டமைப்பு, எண்ம பரிமாற்றம், பருவநிலை மாற்றம், சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் ஐரோப்பிய நாடுகள் வழிவகுக்கும் என்பதால் இந்தியா இதை வரவேற்கிறது’ என்றாா்.

சந்திப்பு:

முன்னதாக, பிரான்ஸ் நாடுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள அமைச்சா் ஜெய்சங்கா் இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளின் பிரதிநிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். வங்கதேசம், தென் கொரியா, செக் குடியரசு, வங்கதேசம் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களுடன் அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →