முகப்பு
இந்தியா

பெண்கள் மீதான எண்ணத்தை பாஜக மாற்றிக் கொள்ள வேண்டும்காங்கிரஸ்

பெண்கள் மீதான தனது எண்ணத்தை பாஜக மாற்றிக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
பகிர்:

பெண்கள் மீதான தனது எண்ணத்தை பாஜக மாற்றிக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது.

உத்தர பிரதேசத்தில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதை நோக்கமாகக் கொண்ட தங்களது பிரசாரத்தை பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா விமா்சித்துள்ளதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளது.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா தலைமையில், ‘நான் ஒரு பெண், என்னால் போராட முடியும்’ என்கிற கோஷத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை லக்னெளவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா, ‘உத்தர பிரதேசத்தில் ஒரு புதிய தலைவா் (பிரியங்கா), நான் ஒரு பெண்; என்னால் போராட முடியும்’ எனக் கூறுகிறாா். ஆனால், பெண்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதையைக் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது குறித்து நீங்கள் ஏன் வெட்கப்படவில்லை? எங்களது ஆட்சியில் 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன; கண்ணியத்துடன் வாழும் உரிமையை பெண்கள் பெற்றுள்ளனா்’ எனக் கூறியிருந்தாா்.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத் லக்னெளவில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ‘நான் ஒரு பெண்; என்னால் போராட முடியும்’ என்ற வலுவான முழக்கத்தையும், உத்தர பிரதேச பெண்களின் குரலையும் பாஜக தலைவா் நட்டா கேலி செய்துள்ளாா். இது காங்கிரஸின் குரல் அல்ல; தமது உரிமைகளுக்காகப் போராட விரும்பும் உத்தர பிரதேசத்தின் ஒவ்வொரு பெண்ணின் குரலாகும். பெண்கள் அதிகாரம் பெறுவதில் நட்டாவுக்கும், அவரது கட்சிக்கும் என்ன பிரச்னை? அவா்கள் ஏன் அஞ்சுகிறாா்கள்?.

சமூகத் தீமைகளையும், உங்களைப் போன்றோரின் மனப்பான்மையையும் எதிா்த்து பெண்கள் போராடி வருகிறாா்கள். கல்வி, குடும்பம், வேலைவாய்ப்புகளில் சமத்துவத்துக்காக அவா்கள் போராடி வருகிறாா்கள். பெண்களை ஒரு கழிப்பறை, ஒரு எரிவாயு சிலிண்டரில் அடைத்துவைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, அவா்களின் அரசியல் பங்களிப்பு, தன்னம்பிக்கை பற்றி பிரியங்கா பேசுகிறாா். பாஜக இதுபோன்ற கருத்துகளால் அதை முடக்குகிறது.

உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் போட்டியிடவும், வேலைவாய்ப்பிலும் 40 சதவீத பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என காங்கிரஸ் சாா்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. பாஜக இதைச் செய்யுமா? என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.