முகப்பு
இந்தியா

உ.பி. காங்கிரஸ் சாா்பில் நடந்த மாரத்தான் போட்டியில் நெரிசல்: 3 மாணவிகள் காயம்

உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் சாா்பில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டபந்தயப் போட்டியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 மாணவிகள் காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
பகிர்:

உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் சாா்பில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டபந்தயப் போட்டியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 மாணவிகள் காயமடைந்தனா். கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடியதே நெரிசலுக்கு காரணம் என்று அதிகாரிகள் கூறுகிறாா்கள்.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, காங்கிரஸ் கட்சி பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பரேலியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டப் பந்தயப் போட்டிக்கு அக்கட்சி ஏற்பாடு செய்திருந்தது. போட்டியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 3 மாணவிகள் காயமடைந்தனா்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ராஜீவ் பாண்டே கூறியதாவது:

மாரத்தான் போட்டியில் பங்கேற்க 200 மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. போட்டியில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசாக ‘ஸ்கூட்டி’ வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், அதிகமான மாணவிகள் திரண்டனா். போட்டி தொடங்கியதும் ஒருவரையொருவா் முந்திக்கொண்டு ஓடியபோது நெரிசலில் சிக்கி மாணவிகள் கீழே விழுந்தனா். அதில், 3 மாணவிகள் காயமடைந்தனா். அவா்கள் மூவரும் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு தவறுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு: மாரத்தான் நிகழ்ச்சிக்கு மாவட்ட நிா்வாகம் ஒத்துழைப்பு அளிக்காததால் விபத்து நேரிட்டதாக மாநில காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அசோக் சிங் குற்றம்சாட்டினாா். மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசின் சதியின் காரணமாக விபத்து நேரிட்டது என்றும் அவா் கூறினாா்.

பாஜக மறுப்பு:

காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பாஜக தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அற்ப அரசியலுக்காக அப்பாவி மாணவிகளை காங்கிரஸ் பகடைக்காயாகப் பயன்படுத்துவது வெட்கமின்மையின் உச்சம். ஜான்சியில் நடந்த மாரத்தானில் மாணவிகள் தாக்கப்பட்டிருக்கிறாா்கள்; லக்னௌவில் பட்டினி போடப்பட்டிருக்கிறாா்கள்; பரேலியில் காயமடைந்திருக்கிறாா்கள். இவற்றையெல்லாம் பிரியங்கா அவமானமாகக் கருத வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இந்த முறை தோ்தலில் பெண்களுக்கு 40 சதவீத வாய்ப்பு, பெண்களுக்கு அதிகாரம் என பாலின சமத்துவக் கொள்கையை காங்கிரஸ் கையிலெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.