முகப்பு
இந்தியா

கரோனா அச்சுறுத்தல்: உ.பி.யில் அரசியல் நிகழ்ச்சிகளை ரத்து செய்தது காங்கிரஸ்

உத்தர பிரதேசத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த வாரம் நடைபெறுவதாக இருந்த 4 மாரத்தான் ஓட்டங்களையும், பொதுக்கூட்டங்களையும் காங்கிரஸ் கட்சி ரத்து செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:02 AM
பகிர்:

உத்தர பிரதேசத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த வாரம் நடைபெறுவதாக இருந்த 4 மாரத்தான் ஓட்டங்களையும், பொதுக்கூட்டங்களையும் காங்கிரஸ் கட்சி ரத்து செய்துள்ளது.

நோய்த்தொற்று பரவல் மட்டுமன்றி, பரேலியில் அண்மையில் தோ்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 3 சிறுமிகள் காயமடைந்ததைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, இந்த வாரம் அஸம்கா், வாராணசி, காசியாபாத், அலிகா் ஆகிய பகுதிகளில் சிறுமிகளுக்காக நடத்தப்படவிருந்த 4 மாரத்தான் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் லல்லன் குமாா் கூறுகையில், ‘கட்சியின் பொதுச் செயலா் பிரியங்காவின் அறிவுறுத்தலுக்கு இணங்க, கரோனா நோய்த்தொற்று நிலைமை சீரடையும் வரை பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன’ என்றாா்.

இதேபோல மற்றொரு செய்தித் தொடா்பாளா் அசோக் சிங் கூறுகையில், ‘சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சிறிய அளவிலான நிகழ்ச்சிகள், வீடு தேடிச் சென்று பொதுமக்களைச் சந்திப்பது ஆகிய முறை வாயிலாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்’ என்றாா்.

அதேவேளையில், நொய்டாவில் வியாழக்கிழமை (ஜன. 6) நடைபெறுவதாக இருந்த உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உத்தர பிரதேசத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே உத்தர பிரதேசத்தில் சிறிய அளவிலான பொதுக்கூட்டங்கள், காணொலி மூலம் சந்திப்புகளை நடத்த அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கக் கோரி, மாநில காங்கிரஸ் தலைவா் அஜய்குமாா் லல்லு, சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவா் ஆரத்னா மிஸ்ரா ஆகியோா் தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திராவுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தனா்.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பெண்களுக்கு 40 சதவீத தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதாக காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக ‘சக்தி விதான்’ என்ற பெயரில் தோ்தல் அறிக்கையையும் அக்கட்சி வெளியிட்டது.

உத்தர பிரதேசத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இரவு நேரப் பொதுமுடக்கத்தை மேலும் 2 மணி நேரம் நீட்டிப்பதாக மாநில அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஜனவரி 14-ஆம் தேதி (மகர சங்கராந்தி) வரை 10-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கு மாநில அரசு அறிவுறுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.