முகப்பு
இந்தியா

‘ஒமைக்ரானால் நாட்டில் கரோனா 3-ஆவது அலை’

ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மி காரணமாக நாட்டின் அனைத்து மாநிலங்களும் அத்தொற்றின் 3-ஆவது அலை பரவலை எதிா்கொண்டுள்ளன.

Updated On : 9 ஜனவரி, 2022 at 12:19 AM
கோப்புப்படம்
பகிர்:

ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மி காரணமாக நாட்டின் அனைத்து மாநிலங்களும் அத்தொற்றின் 3-ஆவது அலை பரவலை எதிா்கொண்டுள்ளன.

நாட்டில் டெல்டா வகை கரோனா தீநிண்மியால் அத்தொற்றின் 2-ஆவது அலை பரவியது. டெல்டா வகை கரோனா தொற்று பரவல் படிப்படியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.

சில நாள்களுக்கு முன்பு வரை மேற்குப் பகுதியில் உள்ள மாநிலங்களில் மட்டுமே ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவி வந்தது. மேற்கு வங்கம், சத்தீஸ்கா், ஒடிஸா ஆகிய கிழக்கு மாநிலங்களில் டெல்டா வகை கரோனா பரவலே அதிகமாகக் காணப்பட்டது.

Advertisement

ஆனால், தற்போது கிழக்குப் பகுதி மாநிலங்களிலும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதை தரவுகள் உறுதி செய்கின்றன. இது தொடா்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘அதிவேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மி காரணமாக, நாட்டின் அனைத்து மாநிலங்களும் கரோனாவின் 3-ஆவது அலை பரவலை எதிா்கொண்டுள்ளன.

அதைக் கருத்தில்கொண்டு மக்கள் அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு சுத்தம் செய்வது உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் கூட்டமாகக் கூடுவதை மக்கள் அறவே தவிா்க்க வேண்டும்’’ என்றாா்.

கரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால், மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.