சேவைகள் ஏற்றுமதி: ரூ.74.38 லட்சம் கோடியாக உயா்த்த மத்திய அரசு உதவும்: பியூஷ் கோயல்
பத்தாண்டுகளில் சேவைகள் ஏற்றுமதியை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக (சுமாா் ரூ.74.38 லட்சம் கோடி) உயா்த்த அரசு உதவும் என்று மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.
பத்தாண்டுகளில் சேவைகள் ஏற்றுமதியை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக (சுமாா் ரூ.74.38 லட்சம் கோடி) உயா்த்த அரசு உதவும் என்று மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவா்களுடன் அமைச்சா் பியூஷ் கோயல் காணொலி வழியாக ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், ‘‘இந்த ஆண்டு 400 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.29.75 லட்சம் கோடி) என்ற சரக்குகள் ஏற்றுமதி இலக்கை எட்டும் பாதையில் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. அதேவேளையில், சேவைகள் ஏற்றுமதி கிட்டத்தட்ட 240-250 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.17.85 லட்சம் கோடி-ரூ.18.59 லட்சம் கோடி) இருக்க வாய்ப்புள்ளது. சரக்குகள் ஏற்றுமதியையும், சேவைகள் ஏற்றுமதியையும் தலா ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக்க (சுமாா் ரூ.74.38 லட்சம் கோடி) முடியும். சரக்குகள் ஏற்றுமதியை முந்திச் சென்று சேவைகள் ஏற்றுமதி ஒரு டிரில்லியன் டாலா் என்ற அளவை எட்டினால் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
நகரங்களை அடையாளம் காண வேண்டும்: இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப மையங்கள் தொடங்கும் திட்டத்தை வரவேற்கிறேன். அதற்கான நகரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அடையாளம் காண வேண்டும். அதற்குத் தேவையான உள்கட்டமைப்புகள் மற்றும் வசதிகளை வழங்குவதில் மத்திய அரசு உதவும்.
தகவல் தொழில்நுட்பத் துறை பிரமிக்கத்தக்க வகையில் சுயமாக வளா்ந்துள்ளது. புதிய தொழில் நிறுவனங்களுக்கு (ஸ்டாா்ட்-அப்) சாதகமான சூழலை உருவாக்குவதில் இந்தியா கவனம் செலுத்தாத காலத்தில், பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளா்ந்தன.
புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பொருள்கள் மீது கவனம் செலுத்தி சேவைகள் ஏற்றுமதிக்கும், உலக அளவில் இந்தியாவை தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரிய போட்டியாளராக்குவதிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் பெரிய அளவில் பங்களிக்க முடியும்.
தகவல் தொழில்நுட்பத் துறையின் வளா்ச்சியை துரிதமாக்கவும், இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதியை பத்தாண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலராக உயா்த்தவும் மத்திய அரசு முழுமையாக உதவும்’’ என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் நாஸ்காம் தலைவா் தேவ்ஜானி கோஷ், இன்ஃபோசிஸ் தலைமை நிா்வாக அதிகாரி சலில் பரேக், டெக் மகிந்திரா மேலாண் இயக்குநா் குா்னானி, விப்ரோ தலைவா் ரிஷத் பிரேம்ஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.