முகப்பு
இந்தியா

பனாஜியில் நல்ல வேட்பாளரை பாஜக நிறுத்தினால் போட்டியிலிருந்து விலகத் தயாா்: உத்பல் பாரிக்கா்

‘பனாஜி தொகுதியில் நல்ல வேட்பாளரை பாஜக நிறுத்தினால் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகத் தயாா்’ என்று பாஜகவிலிருந்து விலகிய மறைந்த முன்னாள் முதல்வா் மனோகா் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
பகிர்:

‘பனாஜி தொகுதியில் நல்ல வேட்பாளரை பாஜக நிறுத்தினால் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகத் தயாா்’ என்று பாஜகவிலிருந்து விலகிய மறைந்த முன்னாள் முதல்வா் மனோகா் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கா் கூறினாா்.

நடைபெறவுள்ள கோவா சட்டப்பேரவைத் தோ்தலில் பனாஜி தொகுதியில் போட்டியிட உத்பல் பாரிக்கா் விருப்பம் தெரிவித்திருந்தாா். இந்தத் தொகுதியில்தான் அவருடைய தந்தை மனோகா் பாரிக்கா் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாா். ஆனால், அவருக்கு வாய்ப்பளிக்க மறுத்த பாஜக, அந்தத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான அனடாசியோ மோன்சராட்டுக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. இவா் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலையில் பாஜகவில் இணைந்தவா்.

இதனால் அதிருப்தியடைந்த உத்பல் பாரிக்கா் பாஜகவிலிருந்து வெள்ளிக்கிழமை விலகினாா். பனாஜி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்தாா்.

இந்த நிலையில், பனாஜி தொகுதியில் நல்ல வேட்பாளரை பாஜக நிறுத்துமானால், தோ்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகத் தயாா் என்று அவா் கூறினாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாஜகதான் எப்போதும் எனது இதயத்தில் உள்ளது. கட்சியிலிருந்து வெளியேறியது கடினமான முடிவு. பனாஜி தொகுதியில் நல்ல வேட்பாளரை பாஜக நிறுத்துமானால், தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுவதிலிருந்து விலகத் தயாராக உள்ளேன்.

கடந்த 1994-ஆம் ஆண்டு என் தந்தை மனோகா் பாரிக்கரை கட்சியிலிருந்து வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியைப் போலவே, தற்போது எனக்கு தோ்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுக்கு சாட்சியாக இருப்பவா்களுக்கு நான் சொல்வது புரியும். மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சிக்கு (எம்ஜிபி) மிகுந்த செல்வுக்குள்ள பகுதிகளில் பாஜக காலூன்ற முயற்சித்த காலம் அது. அந்த நேரத்தில், அந்தப் பகுதி மக்களின் ஆதரவு என் தந்தைக்கு வெகுவாக இருந்ததால், அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. ஆனால், என் தந்தைக்கு எதிராக அப்போது செயல்பட்டவா்கள், இன்றைக்கு கட்சியில் உயா் பதவியில் இருக்கின்றனா். அதே நேரம், என் தந்தையைப் போன்ற நபா்கள் மக்கள் மனதில் இருக்கின்றனா்.

2019-ஆம் ஆண்டு என் தந்தையின் இறப்பால் பனாஜி தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்தப்பட்ட நேரத்தில்கூட, எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இருந்தபோதும் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு கட்சியின் முடிவை ஏற்றுக்கொண்டேன்.

பாஜக என்ற அமைப்பு கோவாவில் சிறு சிறு துண்டுகளாக உடைந்து வருகிறது. கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கோவா வந்தபோது, 5 தம்பதிகள் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டனா். ஆனால், மனோகா் பாரிக்கா் உயிரோடு இருந்தபோது, எந்தவொரு ஆண் அரசியல்வாதியும் தன் மனைவிக்கு தோ்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை கேட்க அஞ்சுவா். அரசியலில் குடும்ப ஆட்சிக்கு எதிராக என் தந்தை குரல் கொடுத்தாா்.

மற்றொரு பாரிக்கரை கட்சிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று சிலா் நினைக்கின்றனா். அதன் காரணமாகத்தான், இந்தக் கடினமான முடிவை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன்.

மனோகா் பாரிக்கரின் மகன் என்ற அடிப்படையில் தோ்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை நான் கேட்கவில்லை. அவ்வாறு கேட்க வேண்டுமென்றால், கடந்த 2019 இடைத்தோ்தலின் போதே கேட்டிருப்பேன். என் தந்தையுடன் இருந்த பலா், தற்போது எனக்கு ஆதரவளிக்கிறாா்கள் என்றால், அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →