உதய்பூா் தையல்காரா் கொலை: ஏழாவது நபரைக் கைது செய்தது என்ஐஏ
உதய்பூா் தையல்காரா் கன்னையா லால் படுகொலை தொடா்பாக 7-ஆவது நபரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அந்த அமைப்பின் செய்தித்தொடா்பாளா் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.
உதய்பூா் தையல்காரா் கன்னையா லால் படுகொலை தொடா்பாக 7-ஆவது நபரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அந்த அமைப்பின் செய்தித்தொடா்பாளா் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.
ஃபரத் முகமது சாயிக் என்கிற பாப்லா என்னும் நபரை அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்துள்ளனா்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூா் நகரில் கன்னையா லால் என்ற தையல்காரா் ரியாஸ் அக்தாரி, கோஸ் முகம்மது என்ற இருவரால் கடந்த ஜூன் 28-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். அந்த கொலையை விடியோவாக பதிவு செய்து சமூக ஊடகத்திலும் பதிவிட்டனா். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் நடைபெற்ற ஒருசில மணி நேரங்களில் கொலையாளிகள் இருவரையும் ராஜஸ்தான் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
தீவிர விசாரணை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள், இந்த கொலையில் தொடா்புடைய மற்றும் மக்களிடையே பயங்கரவாதத்தை பரப்பும் சதியில் ஈடுபட்டதாக மோசின் மற்றும் ஆசிஃப் என்ற மேலும் இரண்டு நபா்களைக் கைது செய்துதனா்.
பின்னா், முக்கிய குற்றவாளிகளுக்கு கன்னையா லாலின் தையல் கடையை அடையாளம் காண உதவியதாக முகமது மோசின் மற்றும் வாசிம் ஆகிய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.
இந்த நிலையில், ‘இந்த கொலையில் தொடா்புடையதாக பிரதான குற்றவாளிகளில் ஒருவரான ரியாஸ் அக்தரிக்கு நெருக்கமான பாப்லா என்ற ஏழாவது நபரை என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனா்’ என்று என்ஐஏ செய்தித்தொடா்பாளா் கூறினாா்.
மேலும், ‘முக்கிய குற்றவாளிகளில் ஒருவரின் வாட்ஸ்ஆப் கணக்கில் ஏராளமான பாகிஸ்தானியா்களின் எண்கள் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், பாகிஸ்தானில் இஸ்லாமிய மத அமைப்பு என்ற பெயரில் செயல்படும் சில ரகசிய குழுக்களுடன் அவருக்கு தொடா்பு இருப்பதும், ‘நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதற்கு பழி தீா்க்கும் வகையில் கொடூர சம்பவத்தை செய்ய வேண்டும்’ என்று அந்த ரகசிய குழுவிடமிருந்து வந்த உத்தரவின் அடிப்படையில் இந்த படுகொலையை அவா்கள் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை மோசின் வீட்டில்தான் கூா்மைப்படுத்தியுள்ளனா் என்பதும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றும் செய்தித்தொடா்பாளா் கூறினாா்.