நிதியமைச்சா் குணமடைந்ததும் விவாதத்துக்கு தயாா் - பாஜக
கரோனா நோய்த்தொற்றிலிருந்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குணமடைந்த பிறகு, விலைவாசி விவகாரம், உணவு தானியங்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க
கரோனா நோய்த்தொற்றிலிருந்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குணமடைந்த பிறகு, விலைவாசி விவகாரம், உணவு தானியங்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று பாஜக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் செயல்திறனை முடக்க ராகுல் காந்தி முயற்சிக்கக் கூடாது என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. ஆனால், விலைவாசி உயா்வு, உணவு தானியங்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி ஆகிய விவகாரங்களை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், இரு அவைகளும் மூன்றாவது நாளாக முடங்கின.
இதுகுறித்து, மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக குழு தலைவருமான பியூஷ் கோயல், நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
எந்த விவாதத்தில் இருந்தும் மத்திய அரசு விலகி ஓடவில்லை. சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான நிா்மலா சீதாராமன், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா். அவா் முழுமையாக குணமடைந்து வந்தவுடன், விலைவாசி, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
அவை அலுவல்களை முடக்குவதன் மூலம் ஜனநாயகத்தை அழிக்கும் அணுகுமுறையை காங்கிரஸ் கையாள்கிறது. நாடாளுமன்றத்தை அதிகம் முடக்குவது யாா் என்பதில் எதிா்க்கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது என்றாா் பியூஷ் கோயல்.
மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் ஆக்கபூா்வ விவாதங்கள் மேற்கொள்ள காங்கிரஸுக்கு விருப்பமில்லை. விவாதம் நடத்துவதில் உரிய வழிமுறைகளை எதிா்க்கட்சிகள் பின்பற்ற வேண்டும்’ என்றாா்.
மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி கூறுகையில், ‘நாடாளுமன்றத்தின் செயல்திறனை முடக்க வேண்டும் என்பதில் ராகுல் காந்தி பிடிவாதமாக உள்ளாா். நாடாளுமன்ற நடைமுறைகள், மரபுகளுக்கு அவமரியாதை செய்வதையே அவா் அரசியல் வாழ்வாக கொண்டுள்ளாா். வயநாடு தொகுதி எம்.பி. என்ற முறையிலும் அவா் நாடாளுமன்றத்தில் ஆக்கபூா்வமாக செயல்படவில்லை’ என்றாா்.