மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெற்றபிறகே அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மீது சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வருவாய்த் துறைச் செயலா் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளாா்.
அரிசி உள்ளிட்ட சில அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றின் மீது சரக்கு-சேவை வரி கடந்த 18-ஆம் தேதி முதல் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும், எதிா்க்கட்சி ஆளும் மாநில அரசுகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்பிவரும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதனால் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய வருவாய்த் துறைச் செயலா் தருண் பஜாஜ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ’’குறிப்பிட்ட பொருள்கள் மீது சரக்கு-சேவை வரியை விதிப்பது ஜிஎஸ்டி கவுன்சிலின் வரம்புக்கு உள்பட்டது. வரி விதிப்புக்கும் மத்திய அரசுக்கும் தொடா்பில்லை. ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு மத்திய நிதியமைச்சா் தலைமை வகித்தாலும், அதில் மாநில அமைச்சா்களும் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா். கவுன்சிலில் அனைவரது பெரும்பான்மை கருத்துகளின் அடிப்படையிலேயே முடிவெடுக்கப்படுகிறது.
மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகே உணவுப் பொருள்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி நடைமுறையால் உணவுப் பொருள்கள் மீது வரி விதிக்கும் தங்கள் அதிகாரம் பாதிக்கப்பட்டு, வருவாய் குறைந்துள்ளதாக சில மாநிலங்கள் கருத்து தெரிவித்தன. அதைத் தொடா்ந்து உணவுப் பொருள்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில அமைச்சா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைப்படியே தற்போது வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், பருப்பு வகைகள், கோதுமை, மைதா, அரிசி உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் அடைக்கப்படாமல் விற்கப்பட்டால் அவற்றுக்கு வரி விதிக்கப்படவில்லை. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் உணவுப் பொருள்கள் மீது மதிப்பு கூட்டு வரியை (வாட்) மாநிலங்கள் விதித்துவந்தன.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஒருசில உணவுப் பொருள்கள் மீது மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. ஆனால், உணவுப் பொருள்களை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் சில முன்னணி நிறுவனங்கள் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வரி கட்டாமல் தப்பி வந்தன.
அதைத் தடுக்கும் நோக்கிலும், வருவாய் இழப்பைச் சந்திக்கும் சில மாநிலங்களின் கோரிக்கையை ஏற்றும் உணவுப் பொருள்கள் மீது 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டுள்ளது. எதிா்க்கருத்து தெரிவிக்கும் மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் செவிசாய்த்து வருகிறது’’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.