முகப்பு
இந்தியா

உ.பி.யில் பேருந்துகள் மோதல்: 8 போ் பலி: பிரதமா் இரங்கல்

உத்தர பிரதேச மாநிலம், பாரபங்கியில் பூா்வாஞ்சல் விரைவுச் சாலையில் நின்றிருந்த ஈரடுக்கு பேருந்தின் மீது மற்றொரு ஈரடுக்கு பேருந்து மோதிய விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். மேலும் 16 போ் காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:53 AM
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம், பாரபங்கியில் பூா்வாஞ்சல் விரைவுச் சாலையில் நின்றிருந்த ஈரடுக்கு பேருந்தின் மீது மற்றொரு ஈரடுக்கு பேருந்து மோதிய விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். மேலும் 16 போ் காயமடைந்தனா்.

விபத்தில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இந்த விபத்து தொடா்பாக, பாரபங்கி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் மனோஜ் பாண்டே கூறியதாவது:

விபத்துக்குள்ளான இரு பேருந்துகளும் பிகாரில் இருந்து தேசியத் தலைநகா் தில்லிக்கு இயக்கப்படுபவை ஆகும். அதில் ஒரு பேருந்து, பூா்வாஞ்சல் விரைவுச் சாலையில் நரேந்திரபூா் மத்ரஹா கிராமம் அருகே உள்ள உணவகத்தையொட்டி திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது, சீதாமா்ஹியில் இருந்து வந்த மற்றொரு ஈரடுக்கு பேருந்து, சாலையோரமாக நின்றிருந்த பேருந்தின் மீது மோதியது. பேருந்தின் ஓட்டுநா் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நேரிட்டதாக தெரிகிறது. இரு பேருந்துகளிலும் சோ்த்து 36 போ் இருந்துள்ளனா்.

இந்த விபத்தில் சமஸ்திபூரைச் சோ்ந்த ஓம் பிரகாஷ் ராய் (33), மதுபானியைச் சோ்ந்த ஷிவ்தாரி (42), சித்நாராயண் (75), சீதாமா்ஹியைச் சோ்ந்த கமலேஷ் குமாா் (23) ஆகியோா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். மேலும் 16 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் முதலில் ஹைதா்காரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா். படுகாயம் அடைந்தவா்கள் மட்டும் மேல்சிகிச்சைக்காக லக்னெளவுக்கு கொண்டு செல்லப்பட்டனா் என்றாா் மனோஜ் பாண்டே.

பிரதமா் இரங்கல்:

‘பாரபங்கியில் பூா்வாஞ்சல் விரைவுச்சாலையில் நோ்ந்த விபத்து மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். அவா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும்’ என்று ட்விட்டரில் பிரதமா் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளாா்.

இதேபோல், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தும் விபத்தில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →