பொருளாதாரத்தை மோடி அரசு கையாண்ட விதம் குறித்து விமா்சகா்களும் பாராட்டு: பாஜக
‘நாட்டின் பொருளாதாரத்தைக் கையாளுவதில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்த முடிவுகள் சரியானதாக மாறி வருகின்றன" என்று பாஜக செய்தித்தொடா்பாளா் சையது ஜாஃபா் இஸ்லாம் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.
‘நாட்டின் பொருளாதாரத்தைக் கையாளுவதில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்த முடிவுகள் சரியானதாக மாறி வருகின்றன; விமா்சகா்களும் பாராட்டுகின்றனா்’ என்று பாஜக செய்தித்தொடா்பாளா் சையது ஜாஃபா் இஸ்லாம் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.
‘கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் சிக்கித் தவித்து வருவதுபோன்ற பிரச்னை எதையும் இந்தியா சந்திக்கவில்லை. இந்தியா போதிய அளவில் அந்நிய செலாவணி கையிருப்பை வைத்திருப்பதோடு, வெளிநாட்டு கடன்களையும் மிகக் குறைவாகவே கொண்டுள்ளது’ என்று ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் சனிக்கிழமை குறிப்பிட்டிருந்த நிலையில், பாஜக சாா்பில் இக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சையது ஜாஃபா் இஸ்லாம் மேலும் கூறுகையில், ‘இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதோடு மட்டமின்றி, வேகமான வளா்ச்சியை பெற்று வருகிறது என்பதை இந்த உலகம் ஒப்புக்கொண்டிருக்கிறது.
பண வீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்து வரும் சூழலில், இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. அரசை இதுவரை விமா்சித்து வந்தவா்கள்கூட தற்போது, மத்திய அரசின் பொருளாதார கொள்கையை பாராட்டும் வகையில் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளனா்’ என்று கூறினாா்.
மத்திய அரசின் பொருளாதார மற்றும் சமூக கொள்கைகளை ரகுராம் ராஜன் முன்னா் விமா்சனம் செய்தும், கவலையும் தெரிவித்துவந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.