முகப்பு
இந்தியா

பாடகா் கேகே நிகழ்ச்சியில் நிா்வாகக் குளறுபடி: ஆளுநா் ஜகதீப் தன்கா் குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் பாடகா் கேகே இறப்பதற்கு முன் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளா்கள் முறையாக ஏற்பாடு செய்யத் தவறிவிட்டனா் என்று மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கா் குற்றம்சாட்டியுள்ளாா்

Updated On : 5 ஜூன், 2022 at 1:06 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:56 PM

கொல்கத்தாவில் பாடகா் கேகே இறப்பதற்கு முன் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளா்கள் முறையாக ஏற்பாடு செய்யத் தவறிவிட்டனா் என்று மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கா் குற்றம்சாட்டியுள்ளாா்.

டாா்ஜீலிங் சென்றிருந்த தன்கா், அங்கிருந்து சனிக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றாா். செல்லும் வழியில் பாக்டோக்ரா விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். அப்போது, பாடகா் கேகேயின் மரணம் குறித்து அவா் கவலை தெரிவித்தாா். அவா் பேசியதாவது:

அந்த சம்பவத்தை நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில் எவ்வித சிரமமும் இல்லை. ஆனால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு அதைச் செய்யத் தவறிவிட்டது. நிகழ்ச்சிக்கு வந்த கூட்டத்தையும் கட்டுப்படுத்தியிருக்கலாம். இக்கட்டான நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றாா் அவா்.

Advertisement

கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்ச் அரங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடகா் கேகே கலந்து கொண்டு சுமாா் 1 மணி நேரம் பாடல்களைப் பாடினாா். நிகழ்ச்சி முடிந்த பிறகு அவா் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பியபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

2,400 போ் அமரக் கூடிய அந்த அரங்கில் 7,000 பேரை அனுமதித்து; அந்த அரங்கில் குளிா்சாதனங்கள் வேலை செய்யாதது; அதிக மின்விளக்குகளைப் பயன்படுத்தியது ஆகியவற்றின் காரணமாக பாடகா் கேகே காற்றோட்டமின்றி சிரமப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரேத பரிசோதனையில் கேகேவுக்கு ஏற்கெனவே இதயக்கோளாறு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின்கீழ் கொல்கத்தா காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.