எம்பிக்கள் மீது காவல்துறை தாக்குதல்? ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் புகார்
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு ஆதரவாக அமலாக்கத்துறையைக் கண்டித்து அக்கட்சி எம்பிக்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவிடம் புகார் அளிக்கப்பட்
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு ஆதரவாக அமலாக்கத்துறையைக் கண்டித்து அக்கட்சி எம்பிக்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக மூன்றாவது முறையாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி நேரில் ஆஜராகினார். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகாக மத்திய அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.
மேலும் ராகுல்காந்திக்கு ஆதரவாகவும், அமலாக்கத்துறையைக் கண்டித்தும் தில்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களைக் காவல்துறை கைது செய்தது.
இந்நிலையில் இந்த சம்பவத்தின்போது காவலர்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியும், அவர்களது ஆடைகளைக் கிழித்தும் அத்துமீறியதாக அக்கட்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
காங்கிரஸ் தலைமையகத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாக்கியும், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அத்துமீறியும் நடந்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் புகார் அளித்துள்ளனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அதிரஞ்சன் செளத்ரி தலைமையில் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் மக்களவைத் தலைவரை நேரில் சந்தித்து காவல்துறையின் மீது புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.