ராகுல் காந்திக்கு மீண்டும் சம்மன்
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான பணமோசடி வழக்கில் 5-வது நாளாக நாளையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான பணமோசடி வழக்கில் 5-வது நாளாக நாளையும் (ஜூன் 21) விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் மூன்று நாள்கள் தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அவருக்கு அழைப்பாணை அனுப்பியது.
இதையும் படிக்க | இன்று கசப்பாக இருக்கலாம், ஆனால்..: அக்னிபத் பற்றி பிரதமர் பேச்சு
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தாயாரும் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவருமான சோனியா காந்தியின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டியுள்ளதால், வெள்ளிக்கிழமை ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ராகுல் காந்தி கோரியிருந்தார். இதையடுத்து, திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை கூறியது.
இதன்படி, நான்காவது நாளாக இன்று அமலாக்கத் துறை முன்பு ஆஜரானார் ராகுல் காந்தி. அமலாக்கத் துறை அவரிடம் மொத்தம் 38 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.
இந்த நிலையில், நாளையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.