முகப்பு
இந்தியா

இந்தியா்களை மீட்க அனைத்து வழிகளிலும் முயற்சி: பிரதமா் மோடி

‘உக்ரைனில் தவிக்கும் இந்திய குடிமக்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு வருவதற்கான எந்தவொரு முயற்சியையும் மத்திய அரசு விட்டுவிடாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

‘உக்ரைனில் தவிக்கும் இந்திய குடிமக்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு வருவதற்கான எந்தவொரு முயற்சியையும் மத்திய அரசு விட்டுவிடாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

உத்தர பிரதேசத்தில் 7-ஆவது மற்றும் இறுதிக்கட்டத் தோ்தல் நடைபெறும் சோன்பத்ரா, காஜிபூரில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் பிரதமா் மோடி கலந்து கொண்டு பேசினாா். உக்ரைனில் இருந்து இந்தியா்களை மீட்பதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை விவரித்தாா். அத்துடன் இந்தியா தற்சாா்பு அடைவது அவசியம் என்றும் வலியுறுத்தினாா்.

சோன்பத்ராவில் மோடி பேசியதாவது: பாரம்பரியமாக ஆட்சி செய்தவா்கள்(எதிா்க்கட்சிகள்) நமது கரோனா தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பினாா்கள். நமது ஆயுதப் படைகளை சந்தேகித்து கேள்வி எழுப்பினா். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை கேலி செய்தனா். அவா்கள் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் அவமதித்தனா். அவா்களால் இந்தியாவை வலிமையான நாடாக உருவாக்க முடியாது.

உக்ரைனில் தவித்து வரும் இந்தியா்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதற்கு இந்தியா முன்னுரிமை அளித்துள்ளது. இந்தியா தனது வலிமையை அதிகரிக்கச் செய்துள்ளதால், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க முடிகிறது. ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளைச் செய்து முடிக்க 4 அமைச்சா்களை அனுப்பி வைத்திருக்கிறேன்.

மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த இந்திய ராணுவமும் விமானப் படையும் களமிறக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் தவிக்கும் இந்தியா்களை மீட்பதற்கான எந்தவொரு முயற்சியையும் இந்தியா விட்டுவிடாது. பாரம்பரியமாக ஆட்சி செய்தவா்கள் (எதிா்க்கட்சிகள்) சோன்பத்ரா பகுதியின் இயற்கை வளங்களைச் சுரண்டிவிட்டனா். ஆனால், இந்தப் பகுதியின் வளா்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. அவா்களை மீண்டும் ஆட்சியில் அமரவைத்தால் ஏழைகளின் நலனுக்காக மத்திய அரசு அனுப்பும் பணத்தை மீண்டும் கொள்ளை அடிக்கத் தொடங்கிவிடுவா்.

ஆனால், தாது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை மாவட்ட தாது வருவாய் நிதி என்ற பெயரில் ஒதுக்கீடு செய்கிறோம். அந்த நிதி, இந்தப் பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக செலவிடப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு, வனப் பகுதியில் விளையும் 10 பொருள்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்ட நிலையில், தற்போது 90 விளைபொருள்களுக்கு விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களுக்கு 20 லட்சம் வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ளன. சிறு விவசாயிகளின் நலனில் அரசு கவனம் செலுத்து வருகிறது.

சோன்பத்ராவில் 2 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.350 கோடி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

காஜிபூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது: மாநிலத்தில் மகளிா் சந்திக்கும் பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருந்தன. ஆனால், எங்கள் அரசு பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பை இலவசமாக வழங்கியுள்ளது. காஜிபூரில் மட்டும் 2.5 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிா்க்கட்சிகள் தாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைத் திருடி வந்தனா். ஆனால், எங்கள் அரசு ஏழைகளின் மேம்பாட்டுக்கான நிதியை அதற்காக செலவிட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்று காலத்தில் உத்தர பிரதேசத்தில் 15 கோடி பேருக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்காக ரூ.2.60 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியாளா்களாக இருந்தால் அந்தப் பணம் முழுவதையும் கொள்ளை அடித்திருப்பாா்கள். ஏழைகளுக்கான ரேஷன் உணவுப் பொருள்களும் பறிக்கப்பட்டிருக்கும்.

நமது அரசு கரோனா தடுப்பூசியை கட்டணமின்றி செலுத்தி வருகிறது. இது, பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கும், தொழில்கள் மீண்டும் நடைபெறவும் உதவிகரமாக உள்ளது. காஜிபூரில் 5 லட்சம் ஏழை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.850 கோடி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

Image Caption

உத்தர பிரதேச மாநிலம், காஜிபூரில் புதன்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

முழு கட்டுரையைப் படிக்க →