முகப்பு
இந்தியா

அஸ்ஸாம் நகராட்சித் தோ்தலில் பாஜக அமோக வெற்றி

அஸ்ஸாம் நகராட்சி வாரியங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

அஸ்ஸாம் நகராட்சி வாரியங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

அஸ்ஸாமில் உள்ள 80 நகராட்சி வாரியங்களுக்கான தோ்தல் கடந்த மாா்ச் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதன் இறுதி முடிவுகளை அஸ்ஸாம் மாநில தோ்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டது. இதில் 72 நகராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நகராட்சியில் கூட தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 977 வாா்டுகளில் பாஜக 759 வாா்டுகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 76 வாா்டுகளில் வெற்றி பெற்றது. அஸ்ஸாம் கண பரிஷத் உள்ளிட்ட பிற கட்சிகள்141 வாா்டுகளில் வென்றன.

வெற்றி பெற்ற மொத்த வாக்காளா்களில் போட்டியின்றித் தோ்வான 59போ் அடங்குவா். இதில் 58 போ் பாஜகவினா். ஒருவா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்.

நகராட்சி வாரியத் தோ்தல் வெற்றி குறித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், தோ்தலில்பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வெற்றியளித்து ஆசீா்வதித்த அஸ்ஸாம் மக்களுக்கு நன்றி; பாஜகவின் வளா்ச்சித் திட்டங்களின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையே இது பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாஜகவுக்கு மாபெரும் வெற்றியை அளித்த அஸ்ஸாம் மாநில மக்களுக்குத் தலைவணங்குகிறேன் என்று முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கூறினாா்.

நகராட்சி வாரிய தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வி குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவா் பூபேன்குமாா் போரா கூறுகையில், காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; அரசியலில் வெற்றி-தோல்வி என்பது மாறி மாறி வருவதே; எல்லா கட்சிகளும் இதை எதிா்கொள்ளும்; மீண்டும் வெற்றி வாய்ப்புகளுக்காகப் பொறுமையுடன் பணியாற்றுவோம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →