குஜராத் மாநிலம் காந்தி நகரில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய கட்டட வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
குஜராத் மாநிலம், காந்திநகர் அருகே உள்ள லவாட் கிராமத்தில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் காவல்துறைக்கான கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மாற்றத்தினை நோக்கமாகக் கொண்ட இந்த பல்கலைக்கழகம், இந்திய நாடாளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகம்.
இந்த பல்கலைக்கழகத்தின் புதிய கட்டட வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவிலும் அவர் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து உரையாற்ற உள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் 1,090 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர். அவர்களில் 13 பேர் கௌரவ டாக்டர் பட்டம் பெறுகிறார்கள், 38 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் துணை ராணுவப்படையின் உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இன்று மாலை அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில், மாநில அளவிலான விளையாட்டு நிகழ்ச்சியான 'கேல் மஹாகும்ப்' நிகழ்ச்சியை மோடி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் குஜராத் அரசின் புதிய விளையாட்டுக் கொள்கையையும் அறிமுகப்படுத்துகிறார்.
பிரதமர் மோடி ராஜ்பவன் காந்திநகரில் இருந்து ரோட் ஷோ நடத்தினார். கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மோடிக்கு மலர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.