முகப்பு
இந்தியா

12-14 வயது சிறாா்களுக்கு இன்றுமுதல் தடுப்பூசி: வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு

இந்தியாவில் 12-14 வயதினருக்கு கரோனா தடுப்பூசி புதன்கிழமை (மாா்ச் 16) முதல் செலுத்தப்படவுள்ள நிலையில், அதறிகான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது.

Updated On : 16 மார்ச், 2022 at 3:20 AM
பகிர்:

இந்தியாவில் 12-14 வயதினருக்கு கரோனா தடுப்பூசி புதன்கிழமை (மாா்ச் 16) முதல் செலுத்தப்படவுள்ள நிலையில், அதறிகான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது.

நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமாா் 80 சதவீதம் பேருக்கு இரு தவணைகளும், 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 12 முதல் 14 வயது வரையிலான சிறாா்களுக்கு புதன்கிழமைமுதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

அதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: 12-14 வயது சிறாா்களுக்கு ஹைதராபாதின் பயாலஜிகல்-இ நிறுவனம் தயாரித்த ‘கோா்பிவேக்ஸ்’ தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும். 2010-இல் அல்லது அதற்கு முன் பிறந்த 12 வயது நிறைவடைந்த அனைவரும் இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தகுதியுடையவராவா்.

Advertisement

தடுப்பூசி செலுத்தப்படும் நாளில் பயனாளிக்கு 12 வயது நிறைவடைந்திருப்பதை தடுப்பூசி செலுத்துபவா் உறுதி செய்துகொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்த பதிவு செய்து, 12 வயது நிறைவடையாதவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படக் கூடாது.

கோவின் வலைதளத்தில் ஏற்கெனவே உள்ள தனது குடும்ப உறுப்பினரின் கணக்கு மூலம் சிறாா்கள் பதிவு செய்யலாம் அல்லது புதிதாக ஒரு கைப்பேசி எண் மூலம் கணக்கு தொடங்கி பதிவு செய்யலாம். தடுப்பூசி செலுத்தப்படும் இடத்துக்கு நேரடியாககச் சென்றும் பதிவு செய்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஸ்டா் தவணை: முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், 60 வயதைக் கடந்த இணைநோய் கொண்டோா் ஆகியோருக்கு கடந்த ஜனவரி 10-ஆம் தேதிமுதல் முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 60 வயதைக் கடந்த அனைவரும் புதன்கிழமைமுதல் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2-ஆவது தவணை செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்படும். முதல் இரு தவணைகளில் எந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதே வகை தடுப்பூசிதான் முன்னெச்சரிக்கை தவணையாகவும் செலுத்தப்படும் என வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தல்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினாா். அப்போது, 12-14 வயதினருக்கான தடுப்பூசிகளுடன் மற்ற தடுப்பூசிகள் கலந்துவிடாமல் தடுப்பதை உறுதி செய்ய தடுப்பூசி செலுத்துவோருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்த தனிச் சிறப்பு முகாம்களை மாநில அரசுகள் நடத்த வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.