அழுத்தம் தரும் அதிருப்தி தலைவர்கள்...குலாம் நபி ஆசாத்தை சந்திக்கிறாரா சோனியா காந்தி?
காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் தலைமையில் ஆலோசனை நடத்திய நிலையில், சோனியா காந்தி அவரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவர் குலாப் நபி ஆசாத்தை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் தலைமையில் கட்சியின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், சோனியா காந்தி அவரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், காந்தி குடும்பத்தின் ஆதரவாளர்கள் எடுத்த நிலைபாடு காரணமாக ஜி - 23 என சொல்லப்படும் அதிருப்தி குழுவை சேர்ந்த தலைவர்கள் வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து,
புதன்கிழமை முதல், அவர்கள் பல முறை கூடி ஆலோசனை நடத்தினர்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கட்சியில் தாங்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து விலகுவதாக செயற்குழு கூட்டத்தில் கூறியுள்ளனர். ஆனால், செயற்குழு அதை ஏற்கவில்லை. இதற்கு மத்தியில், கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என ஜி-23 தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். தொடர் தோல்வி காரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு, அவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
பின்னர், இவர்கள் புதின்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "அனைத்து மட்டங்களிலும் அனைவரையும் உள்ளடக்கி கூட்டுத் தலைமையை கடைபிடித்து முடிவெடுக்கும் மாதிரியைக் கடைப்பிடிப்பதே காங்கிரஸ் கட்சியிக்கு இருக்கும் ஒரே வழி. கட்சியை பலப்படுத்துவே விரும்புகிறோம். பலவீனமாக்க விரும்பவில்லை" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | காங்கிரஸ் அதிருப்தி தலைவா் பூபிந்தா் சிங் ஹூடாவுடன் ராகுல் சந்திப்பு
இதனிடையே, ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடாவை, ராகுல் காந்தி நேற்று சந்தித்து பேசினார். இவர், புதன்கிழமை நடைபெற்ற ஜி - 23 தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். அப்போது, கட்சியின் முடிவுகளை யார் எடுப்பது என்பது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் கட்சியில் எடுக்கப்படும் முடிவுகளை நாளிதழ்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.