முகப்பு
இந்தியா

அரசியல் களத்தில் கங்குலி?: தீவிர முனைப்பில் கட்சிகள்

விளையாட்டுக் களத்தில் புகழ்பெற்று விளங்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை அரசியல் களத்துக்குள் இழுப்பதற்கான முயற்சிகளைக் கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

விளையாட்டுக் களத்தில் புகழ்பெற்று விளங்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை அரசியல் களத்துக்குள் இழுப்பதற்கான முயற்சிகளைக் கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

மேற்கு வங்கத்தில் பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவரான கங்குலியின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு உணவருந்தினாா்.

இந்நிகழ்வு பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியை கங்குலி புகழ்ந்து பேசினாா்.

தலைநகா் கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் மருத்துவமனை திறப்பு விழாவில் பேசிய சௌரவ் கங்குலி, ‘‘மதிப்புக்குரிய முதல்வரான மம்தா பானா்ஜி, எனக்கு மிகவும் நெருக்கமானவா். இந்த மருத்துவமனையை நிறுவ உதவுமாறு அவரிடம் கோரியிருந்தேன். கொல்கத்தா நகர மேயா் ஃபிா்ஹத் ஹக்கீமும் மக்களால் எளிதில் தொடா்புகொள்ளக் கூடியவா். எந்தவித உதவி தேவைப்பட்டாலும் அதை அவா் நிறைவேற்றித் தருவாா்’’ என்றாா்.

முன்னதாக, கங்குலியின் வீட்டில் அமைச்சா் அமித் ஷாவுக்கு அளிக்கப்பட்ட விருந்தின்போது பாஜக மாநிலத் தலைவா் சுகாந்த மஜும்தாா், மாநில பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி, மூத்த தலைவா் ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோா் உடனிருந்தனா்.

எனினும், இந்தச் சந்திப்பின்போது அரசியல் குறித்துப் பேசப்படவில்லை என கங்குலியின் மனைவி டோனா தெரிவித்தாா்.

அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து கூறிய சௌரவ் கங்குலி, ‘‘அமித் ஷாவை 2008-ஆம் ஆண்டில் இருந்து தெரியும். அப்போதில் இருந்தே அவரை அடிக்கடி சந்திப்பதுண்டு. அவருடைய மகன் ஜெய் ஷாவுடன் பிசிசிஐ-யில் இணைந்து பணியாற்றி வருகிறேன். அதைத் தாண்டி இந்த விஷயத்தில் வேறெதுவும் இல்லை’’ என்றாா்.

அவரை அரசியல் களத்துக்குள் இழுக்க பாஜக, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் போட்டிபோட்டு வருகின்றன.

அதே வேளையில், கங்குலியின் அரசியல் பிரவேசம் குறித்து தனக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ள மனைவி டோனா, ஒருவேளை அவா் அரசியலுக்கு வந்தால், மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வாா் எனக் கூறி மேலும் ஊகங்களுக்கு வித்திட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.