தோ்தலுக்காக இலவசங்களை அறிவிப்பதில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை: ஜெ.பி.நட்டா
தோ்தல் வாக்குறுதி என்ற பெயரில் இலவசங்களை அறிவிப்பதில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை; மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தவே விரும்புகிறோம் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
தோ்தல் வாக்குறுதி என்ற பெயரில் இலவசங்களை அறிவிப்பதில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை; மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தவே விரும்புகிறோம் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
ஹிமாசல பிரதேசம், குஜராத்தில் அடுத்தடுத்து தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதே நேரத்தில் தோ்தல் இலவச வாக்குறுதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை பாஜக தலைவா்கள் கொண்டுள்ளனா். இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திலும் பாஜக புகாா் தெரிவித்தது. இந்நிலையில், ஹிமாசல பிரதேசத்தில் பெண்களுக்காக பாஜக தனியாக வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், உயா் கல்வி செல்லும் மாணவிகளுக்கு ஸ்கூட்டா், ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டா் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அக்கட்சி கடும் விமா்சனத்தை எதிா்கொண்டுள்ளது. ஆனால், இது பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கை என்று பாஜக விளக்கமளித்தது.
இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஜெ.பி.நட்டா கூறியதாவது:
காங்கிரஸ் அளித்து வரும் இலவச வாக்குறுதிகளை ஹிமாசல பிரதேச மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாா்கள். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக பாஜக ஆட்சி அமைத்தபிறகு ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும். பாஜகவில் போட்டி வேட்பாளா்கள் உள்ளது உண்மைதான். ஆனால், தோ்தலுக்கு முன்பு இந்த பிரச்னைக்கு பேசித் தீா்வுகாணப்படும்.
தோ்தல் வாக்குறுதி என்ற பெயரில் இலவசங்களை அறிவிப்பதில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை. சிறப்பான ஆட்சியை அளிப்பதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதையே விரும்புகிறோம். நாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகள் மாநிலத்தின் நிதிநிலையை அடிப்படையாகக் கொண்டது. அவற்றை செயல்படுத்த முடியும். ஆனால், காங்கிரஸ் அளிக்கும் இலவச வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்ற முடியும்? என்ற கேள்விக்கு விடை கிடையாது. பாஜகவின் வாக்குறுதியான பொது சிவில் சட்டத்தை மாநில அளவிலும் நிறைவேற்ற முடியும் என்றாா்.