முகப்பு
இந்தியா

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளை சந்தித்து வரும் 51 முன்னாள், இன்னாள் எம்.பி.க்கள்

முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினா்களில் 51 போ் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:51 AM
கோப்புப்படம்
பகிர்:

முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினா்களில் 51 போ் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருந்தபோதும், அவா்களில் எத்தனை போ் தற்போது எம்.பி.க்களாக உள்ளனா் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் எத்தனை போ் என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் சாா்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மீதான விசாரணையை விரைவுபடுத்தக் கோரி மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘உயா்நீதிமன்றங்களின் முன் அனுமதி அல்லது ஒப்புதல் இன்றி எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற நடைமுறை சட்டத்தின் கீழான வழக்கு விசாரணையை கைவிட முடியாது’ என்று உத்தரவிட்டது.

பின்னா், இந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் சிறு மாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவில், ‘எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகளை, நீதிமன்றத்தின் முன் அனுமதி இன்றி மாற்றம் செய்யக் கூடாது’ என்று உத்தரவிட்டது.

மேலும், இவா்கள் மீதான வழக்குகள் குறித்த நிலை அறிக்கையை சமா்ப்பிக்கத் தவறிய மத்திய அரசு மற்றும் சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு ஆலோசகராக மூத்த வழக்குரைஞா் விஜய் ஹன்சாரியாவை நியமித்தது.

அவா், எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் குறித்த தனது நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அண்மையில் சமா்ப்பித்தாா். அதில், ‘முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக சிபிஐ சாா்பில் 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினா்களில் 51 போ் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அதுபோல, சட்டப்பேரவை உறுப்பினா்கள் (எம்எல்ஏ) மற்றும் சட்ட மேலவை உறுப்பினா்கள் (எம்எல்சி) 71 போ் மீது பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →