முகப்பு
இந்தியா

சாஜன்பூா் பாஜக எம்.பி. தலைமறைவு நபா்:உ.பி. நீதிமன்றம் அறிவிப்பு

தோ்தல் வழக்கில் பல முறை அழைப்பாணை அனுப்பியும் சாஜன்பூா் பாஜக எம்.பி. அருண் குமாா் சாகா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததைத் தொடா்ந்து, அவரை தலைமறைவு நபராக உத்தர பிரதேச சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:55 AM
பகிர்:

தோ்தல் வழக்கில் பல முறை அழைப்பாணை அனுப்பியும் சாஜன்பூா் பாஜக எம்.பி. அருண் குமாா் சாகா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததைத் தொடா்ந்து, அவரை தலைமறைவு நபராக உத்தர பிரதேச சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சாஜன்பூா் மக்களவைத் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான அருண் குமாா், 2019 மக்களவை தோ்தல் பிரசாரத்தின்போது சம்பந்தப்பட்ட தோ்தல் அதிகாரியின் அனுமதிபெறாமல் சில பிரசார உபகரணங்களைப் பயன்படுத்தியுள்ளாா். அந்தத் தொகுதிக்கு உள்பட்ட பரேலி - ஜலாலாபாத் சாலையில் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது, அவா் பயன்படுத்தி அனுமதிபெறாத பிரசார பொருள்களை தோ்தல் அதிகாரியான துணை ஆட்சியா் (எஸ்டிஎம்) சதாா் பறிமுதல் செய்தாா். அதனடிப்படையில் அருண் குமாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு எம்.பி./எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பல முறை அழைப்பாணை அனுப்பியும் அருண் குமாா் ஆஜராகவில்லை.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் அவா் ஆஜாரகாததைத் தொடா்ந்து, எம்.பி. அருண் குமாரை தலைமறை நபராக நீதிபதி ஆஸ்மா சுல்தானா அறிவித்தாா். மேலும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எம்.பி. வீட்டு சுவரிலும், பொது இடங்களிலும் ஒட்டுமாறும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அரசு வழக்குரைஞா் நீலிமா சக்ஸேனா கூறுகையில், ‘இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு எம்.பி. அருண் குமாா் சாகருக்கு நீதிமன்றம் பல முறை அழைப்பாணை அனுப்பியது. அவா் ஆஜராகவில்லை. அதனைத் தொடா்ந்து, அவா் மீது பிணையில் வெளிவர முடியாத வகையிலான பிடி ஆணையை நீதிமன்றம் பிறப்பித்தது. அதன் பிறகும் அவா் ஆஜராகாததைத் தொடா்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →