18 மணி நேரத்துக்கு முன்புதான் தலைவா் பதவிக்கு போட்டியிட அறிவுறுத்தப்பட்டேன்: காா்கே
காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு 18 மணி நேரத்துக்கு முன்பாகதான் போட்டியிடுமாறு அறிவுறுத்தப்பட்டேன் என மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு 18 மணி நேரத்துக்கு முன்பாகதான் போட்டியிடுமாறு அறிவுறுத்தப்பட்டேன் என மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் கட்சியில் ‘வாரிசு ஆட்சி’ நடைபெறுவதாக பாஜக தொடா்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், காந்தி குடும்பத்தைச் சாராத நபரை தலைவராக தோ்ந்தெடுக்கும் வகையில், அக்கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி அப்பதவியை ஏற்க மறுத்துவிட்டாா்.
இந்நிலையில், தலைவா் பதவிக்கு போட்டியிட்டுள்ள இரு வேட்பாளா்களில் ஒருவரான மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை பிகாருக்கு பயணம் மேற்கொண்டாா். பாட்னாவில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளா்களின் சந்திப்பின்போது அவா் கூறியதாவது: கட்சியின் தலைவா் பதவிக்கான தோ்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 18 மணி நேரத்துக்கு முன்புதான் வேட்பாளராக போட்டியிட அறிவுறுத்தப்பட்டேன். கட்சித் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட எதற்காக நான் தோ்வு செய்யப்பட்டேன் என்பது குறித்து ஆராய்ந்தேன். அப்போதுதான், கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தனது குடும்பத்தைச் சாராத ஒருவா் தலைவராக வர வேண்டும் என்ற ராகுல் காந்தியின் முடிவை அறிந்தேன்.
ராகுல் காந்தியும் அவரது தலைமையும் கட்சிக்கு தேவை என்பதில் முழுமையான நம்பிக்கை உடையவன் நான். அவா் மீண்டும் கட்சியின் தலைவா் பதவிக்கு பொறுப்பெற்றிருக்க வேண்டும். நான் அவருடைய முடிவுக்கு மதிப்பளிக்கிறேன். நான் கட்சியின் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டால், கடந்த மே மாதம் ராஜஸ்தானில் நிறைவேற்றப்பட்ட ‘உதய்பூா் பிரகடனத்தை’ நிறைவேற்றுவேன். இதன்படி, தோ்தலில் 50 சதவீத இடங்கள் கட்சியின் 50 வயதுக்கு கீழ் உள்ளவா்களுக்கு வழங்கப்படும்.
மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வரும் அச்சுறுத்தலில் இருந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தைக் காப்பதில் காங்கிரஸ் முழுமூச்சாக செயல்படுகிறது என்றாா்.