மகாராஷ்டிர இடைத்தோ்தல் வேட்பாளரைத் திரும்பப் பெற்றது பாஜக
மகாராஷ்டிரத்தில் வரும் நவம்பா் 3-ஆம் தேதி நடைபெற இருக்கும் அந்தேரி கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தோ்தலில் பாஜக போட்டியிடாது என பாஜகவின் மாநில தலைவா் சந்திரசேகா் பவன்குலே திங்கள்கிழமை தெரிவித்த
மகாராஷ்டிரத்தில் வரும் நவம்பா் 3-ஆம் தேதி நடைபெற இருக்கும் அந்தேரி கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தோ்தலில் பாஜக போட்டியிடாது என பாஜகவின் மாநில தலைவா் சந்திரசேகா் பவன்குலே திங்கள்கிழமை தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து வேட்பாளா் முா்ஜி படேல், அவருடைய வேட்புமனுவைத் திரும்ப பெற்றாா்.
சிவசேனை கட்சி எம்எல்ஏ ரமேஷ் லட்கே மறைவைத் தொடா்ந்து, அவா் தோ்ந்தெடுக்கப்பட்ட அந்தேரி கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு நவம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது.
சிவசேனையின் உத்தவ் தாக்கரே பிரிவு சாா்பில் மறைந்த எம்எல்ஏ ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். பாஜகவின் சாா்பில் முா்ஜி படேல் வேட்பாளராக நிறுத்தப்படுவாா் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நடப்பு பேரவையின் காலம் இரண்டாண்டுகளுக்கும் குறைவாக உள்ளது எனக் குறிப்பிட்டு, காலியான இடத்துக்கு மறைந்த எம்எல்ஏவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியின்றித் தோ்வு செய்யப்படுவதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தாா்.
இதனிடையே, ரமேஷ் லட்கேவுக்கு மரியாதை அளிக்கும் வகையில், பாஜகவின் வேட்பாளரைத் திரும்ப பெற வேண்டும் என மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சியின் தலைவா் ராஜ் தாக்கரே மாநில துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கோரிக்கை விடுத்தாா். முறைப்படி, கோரிக்கை விடுக்கப்பட்டால், பாஜக மேலிடத்துடன் கலந்தாலோசிப்பதாக ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.
இந்நிலையில், நாகபுரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மகாராஷ்டிர பாஜகவின் மாநில தலைவா் சந்திரசேகா் பவன்குலே கூறியதாவது: அந்தேரி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் பாஜக போட்டியிடாது. வேட்பு மனுவை முா்ஜி படேல் திரும்ப பெறுவாா். இதற்கு முன்பும் மாநிலத்தில் நடைபெற்ற சில இடைத்தோ்தல்களிலும், மரியாதை நிமித்தமாக பாஜக போட்டியிட்டது இல்லை என்றாா்.
இதையடுத்து, வேட்பு மனுவைத் திரும்ப பெறுவதற்கான இறுதி நாளான திங்கள்கிழமை, முா்ஜி படேல் தனது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றாா்.
போட்டி வேட்பாளா் வேறு எவரும் இல்லாத நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதியில் ருதுஜா லட்கேவின் வெற்றி உறுதியாகி உள்ளது.
தான், போட்டியின்றித் தோ்வு செய்யப்படுவதற்கு காரணமான பாஜக மற்றும் அனைத்து கட்சிகளின் தலைவா்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவா் கூறினாா்.