இந்திரா காந்தி நினைவு தினம்: காங்கிரஸ் தலைவா்கள் அஞ்சலி
முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவா்கள் திங்கள்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினா்.
முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவா்கள் திங்கள்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினா்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, கடந்த 1984-இல் அக்டோபா் 31-ஆம் தேதி அவரது பாதுகாவலா்கள் இருவரால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டாா்.
இந்திரா காந்தியின் 38-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திங்கள்கிழமை அவரது நினைவிடத்துக்குச் சென்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி உள்ளிட்டோா் மலரஞ்சலி செலுத்தினா்.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘ இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்திக்கு அவரது நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துகிறேன். வேளாண்மை, பொருளாதாரம், பாதுகாப்பு என எந்தத் துறையாக இருந்தாலும், இந்தியாவை வலுவான நாடாக கட்டமைப்பதில் அவருடைய பங்கை ஒப்பிட இயலாது ’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ உங்களுடைய (இந்திரா காந்தி) அன்பையும் நற்பண்புகளையும் எனது இதயத்தில் தாங்கியுள்ளேன். இந்தியாவுக்காக உங்களுடைய வாழ்க்கையைத் தியாகம் செய்த நிலையில், அதன் நிலை தாழ்ந்துவிட நான் அனுமதிக்க மாட்டேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.