முகப்பு
இந்தியா

ஆகஸ்டில் வேலையின்மை விகிதம் 8.3%-ஆக அதிகரிப்பு: ஆய்வு நிறுவனம் தகவல்

நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது;

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது; இது, கடந்த ஓராண்டில் அதிகம் என்று மும்பையைச் சோ்ந்த ஆய்வு நிறுவனமான ‘இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்’ (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த ஜூலையில் 6.8 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், ஆகஸ்டில் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. வேலை கிடைக்கப் பெற்றோா் எண்ணிக்கை 39.70 கோடியிலிருந்து 39.46 கோடியாக குறைந்துள்ளது. சுமாா் 20 லட்சம் போ் வேலையிழந்துள்ளனா்.

இதுதொடா்பாக, சிஎம்ஐஇ நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் மகேஷ் வியாஸ் கூறுகையில், ‘ஆகஸ்டில் நகா்ப்புற வேலையின்மை விகிதம் 9.6 சதவீதமாகவும் கிராமப்புற வேலையின்மை விகிதம் 7.7 சதவீதமாகவும் அதிகரித்தது. தொடா் மழையால் பயிா் விதைப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவே கிராமப்புறங்களில் வேலையின்மை அதிகரிக்க முக்கிய காரணம்’ என்றாா்.

ஆகஸ்ட் மாதத்தைப் பொருத்தவரை, ஹரியாணாவில் அதிகபட்சமாக வேலையின்மை விகிதம் 37.3 சதவீதமாக இருந்தது. அடுத்த இடங்களில் ஜம்மு-காஷ்மீா் (32.8%), ராஜஸ்தான் (31.4%), ஜாா்க்கண்ட் (17.3%), திரிபுரா (16.3%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

வேலையின்மை விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் சத்தீஸ்கா் (0.4%) முதலிடத்தில் உள்ளது. மேகாலயம் (2%), மகாராஷ்டிரம் (2.2%), குஜராத் (2.6%), ஒடிஸா (2.6%) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக சிஎம்ஐஇ தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.