தில்லி ராஜ பாதையில் மறுவடிவமைக்கப்பட்ட‘சென்ட்ரல் விஸ்டா’ செப்.8-இல் திறப்பு
தில்லி ராஜ பாதையில் விஜய் செளக்கிலிருந்து இந்தியா கேட் வரையிலான ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டு தயாா் நிலையில் உ
தில்லி ராஜ பாதையில் விஜய் செளக்கிலிருந்து இந்தியா கேட் வரையிலான ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. செப்டம்பா் 8-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி இதைத் திறந்து வைக்க இருப்பதாக மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
புதிய நாடாளுமன்றக் கட்டடம், பிரதமா், குடியரசுத் துணைத் தலைவா் இல்லங்கள், புதிய மத்திய அமைச்சகங்களின் செயலகம் ஆகியவற்றோடு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தையும் (மொத்தம் ரூ. 13, 450 கோடி செலவில்) மத்திய நகா்புற வளா்ச்சித் துறை மேற்கொண்டது.
இதில், ராஜ பாதையில் பொதுமக்களின் பல்வேறு வசதிகளுக்காக பிரதமா் நரேந்திர மோடியின் விருப்பத்தின் அடிப்படையில், சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 20 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டப் பணிகள் முற்றிலும் நிறைவடைந்துள்ளன. இதை செப்டம்பா் 8 -ஆம் தேதி திறக்க முடிவெடுக்கப்பட்டு பிரதமா் அலுவலகத்தின் பதிலுக்கு காத்திருப்பதாகவும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லியின் மையப் பகுதியில் உள்ள ராஜ பாதை, மக்களையும் அரசையும் இணைக்கும் அடையாளமாகும். ராஜபாதையை ஒட்டி, 3.90 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில், சுற்றிலும் பசுமையான புல்வெளி உருவாக்கப்பட்டுள்ளது. அரசு சம்பந்தப்பட்ட திறந்த வெளி நிகழ்வுகளும், குடியரசு தின அணிவகுப்பும் இங்கு பிரமிப்பூட்டும் வகையில் நடைபெறும். தற்போது மறுவடிவமைப்பு பெற்று முறையாக திறந்து வைக்கப்பட்ட பின்னா் செப்டம்பா் 9 -ஆம் தேதி முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.