3 ஆண்டுகளில் துடிப்பான பணியாளர்களை உருவாக்க 25 லட்சம் பயிற்சியாளர்கள்
நாட்டில் ஒவ்வொரு துறையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழில்நுட்பத்தால் வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது
நாட்டில் ஒவ்வொரு துறையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழில்நுட்பத்தால் வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. புதிய திறன் சூழல்கள் தேவை உருவாகும் நிலையில், துடிப்பான பணியாளர்களை உருவாக்குவதற்கு பயிற்சியாளர்களின் திறன் கட்டமைக்கப்பட வேண்டும். இதற்கு அடுத்த 3 ஆண்டுகளில் 25 லட்சம் பயிற்சியாளர்களைத் தயார் செய்ய வேண்டும் என மத்திய திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனங்களை மத்திய கல்வி, திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டுக்கொண்டார்.
மத்திய திறன் மேம்பாடு, தொழில் முனைவேர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியத் தொழில்முனைவு மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், தொழில்முனைவு , திறன் மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பயிற்சி, ஆலோசனை, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது. முக்கியமாக, பயிற்சியாளர்களுக்கான பயிற்சியை இந்த நிறுவனம் அளித்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் இந்தப் பயிற்சி நிறுவனங்களின் மறுவடிவம் குறித்த கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு வார சிந்தனை அமர்வை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்ற இந்த அமர்வில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:
தொழில்நுட்பம், உலகை மிக வேகமாக மாற்றியமைத்து வருகிறது. கல்வி, சுகாதாரம், வேளாண்மை, நிதி என ஒவ்வொரு துறையும் தொழில்நுட்பத்தால் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. இதன்மூலம் புதிய வாய்ப்புகளும், புதிய திறன் சூழல்களுக்கான தேவையும் உருவாகி வருகிறது. இதற்கு துடிப்பான பணியாளர்களை உருவாக்க பயிற்சியாளர்களின் திறன்களை கட்டமைப்பதும் அவசியமாகும். இதற்குப் பயிற்சி நிறுவனங்கள், திறன் சூழலியலை வலுவாக்க ஒரு விரிவான, எதிர்கால உத்தியுடன் தங்களை மறுவடிவமைத்து மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இந்த நவீன திறன் கட்டமைப்புடன் அடுத்த தலைமுறை பணியாளர்களை உருவாக்குவதில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். இதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் 25 லட்சம் பயிற்சியாளர்களைத் தயார் செய்ய வேண்டும். இதன் மூலமே பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான இந்தியாவைத் திறன் மையமாக மாற்ற முடியும். இதற்கு சிறந்த கண்டுபிடிப்புகள், நிறுவன சீர்திருத்தங்கள், புதிய யோசனைகள், சர்வதேச ஒத்துழைப்புகள், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், திறனுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை மறுவடிவமைப்பது போன்றவற்றின் மூலமே நாட்டை உலகின் திறன் தலைநகராக மாற்ற முடியும் என்றார் அமைச்சர்.
இந்த நிகழ்வில் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவுத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், செயலர் ராஜேஷ் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசியத் தொழில் முனைவு மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் இதுவரை சுமார் 12, 37,307 பேருக்கு பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்துள்ளது. இவை தவிர திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள பயிற்சி இயக்குநர் ஜெனரலுடன், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம், தேசிய தொழில்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில், 38 துறைகளின் திறன் கவுன்சில்கள், 33 தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள், 15,000 தொழில் துறை பயிற்சி நிறுவனங்கள் ஆகிய பொதுத் துறை தனியார் நிறுவனங்கள் பதிவு செய்து திறன் மேம்பாட்டில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றன.