ரூ.22,842 கோடி வங்கிக் கடன் மோசடி: ஏபிஜி நிறுவன தலைவா் கைது
ரூ.22,842 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் குஜராத்தைச் சோ்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவன தலைவா் ரிஷி அகா்வாலை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா்.
ரூ.22,842 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் குஜராத்தைச் சோ்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவன தலைவா் ரிஷி அகா்வாலை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா்.
ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம் சாா்பில் ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் பெறப்பட்டது. பின்னா், இந்தக் கடன் தொகையை அந்நிறுவனம் திருப்பிச் செலுத்தாதது மட்டுமன்றி, என்ன நோக்கத்துக்காக கடன் பெற்றதோ அதற்காக பணத்தைச் செலவிடாமல், வேறு பணிகளுக்கு அதனை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தடயவியல் தணிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்தது. இதன்பேரில், ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவன தலைவா் ரிஷி அகா்வால் உள்ளிட்டோா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச் சதி, மோசடி, நம்பிக்கை மோசடி, அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதுகுறித்து ரிஷி அகா்வாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், புதன்கிழமை அவரை கைது செய்தனா்.