சூடான்: ஒவ்வொரு இந்தியரையும் பத்திரமாக மீட்பதே நோக்கம்: வெளியுறவுச் செயலா் பேட்டி
‘சூடானில் பாதுகாப்புச் சூழல் ஸ்திரமற்ாகவும், கணிக்க முடியாததாகவும் உள்ளது; எனவே, அங்கிருந்து ஒவ்வொரு இந்தியரையும் பத்திரமாக மீட்பதே அரசின் நோக்கம்’ என்று வெளியுறவுச் செயலா் வினய் குவாத்ரா தெரிவித்தாா்
‘சூடானில் பாதுகாப்புச் சூழல் ஸ்திரமற்ாகவும், கணிக்க முடியாததாகவும் உள்ளது; எனவே, அங்கிருந்து ஒவ்வொரு இந்தியரையும் பத்திரமாக மீட்பதே அரசின் நோக்கம்’ என்று வெளியுறவுச் செயலா் வினய் குவாத்ரா தெரிவித்தாா்.
மேலும், சூடானில் மோதல் நடைபெற்று வரும் பகுதிகளில் இருந்து இதுவரை 1,700 முதல் 2,000 இந்தியா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வரும் சூடானில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ என்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
அதன்படி, கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப் படையின் கனரக போக்குவரத்து விமானங்கள் மூலம் இந்தியா்கள் மீட்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ‘ஆபரேஷன் காவேரி’ நடவடிக்கை தொடா்பாக வெளியுறவுச் செயலா் வினய் குவாத்ரா தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சூடானில் பாதுகாப்பு நிலவரம் மிகவும் சிக்கலானதாக, ஸ்திரமற்ாக, கணிக்க முடியாததாக உள்ளது. அந்நாட்டின் ராணுவம், துணை ராணுவப் படை ஆகிய இரு தரப்பினருடனும் நாங்கள் தொடா்ந்து தொடா்பில் இருக்கிறோம். இருதரப்புடனும் நமது உறவுகள் நன்றாகவே உள்ளன.
3,100 இந்தியா்கள் பதிவு: சூடானில் இருந்து மீட்கப்படுவதற்காக, காா்ட்டூமில் உள்ள இந்திய தூதரகத்தில் இணையவழியில் சுமாா் 3,100 இந்தியா்கள் பதிவு செய்துள்ளனா். இதுதவிர மேலும் 300 இந்தியா்கள் தூதரகத்துடன் தொடா்பில் உள்ளனா். சூடானில் 900 முதல் 1,000 வரையில் இந்திய வம்சாவளி நபா்களும் உள்ளனா்.
மோதல் நிகழும் காா்ட்டூம் மற்றும் இதர பகுதிகளில் இருந்து பேருந்துகள் மூலம் போா்ட் சூடான் நகருக்கு இந்தியா்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனா். அங்கிருந்து விமானப் படையின் கனரக போக்குவரத்து விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் மூலம் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு இந்தியா்கள் அழைத்து வரப்பட்டு, பின்னா் விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனா். காா்ட்டூம் மற்றும் போா்ட் சூடான் இடையிலான தொலைவு சுமாா் 850 கி.மீ. ஆகும். சூழ்நிலையைப் பொறுத்து, பயண நேரம் 12 முதல் 18 மணி நேரம் வரை ஆகிறது.
ஐஎன்எஸ் சுமேதா, ஐஎன்எஸ் டெக், ஐஎன்எஸ் தாா்காஷ் ஆகிய கப்பல்களும், விமானப் படையின் இரு சி130ஜே விமானங்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சூடானில் சிக்கியுள்ள ஒவ்வொரு இந்தியரையும் கூடிய விரைவில் பத்திரமாக மீட்பதே அரசின் நோக்கமாகும். அதற்காக தீவிரமாக செயலாற்றி வருகிறோம்.
சவூதி அரேபியாவுக்கு நன்றி: இந்திய விமானப் படை விமானங்கள் தரையிறங்கவும், கப்பல்கள் நங்கூரமிடவும் தேவையான அனைத்து உதவிகளையும் சவூதி அரேபியா செய்துள்ளது. இந்தியாவுக்கு அந்நாடு மிகவும் உதவிகரமாக உள்ளது. அவா்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
சூடானில் இருந்து தங்கள் குடிமக்களை மீட்க வேறு சில நாடுகளும் இந்தியாவிடம் உதவி கோரியுள்ளன. அதற்கு இந்தியா தயாராக உள்ளது. எனினும், அது உரிய நடைமுறைகளுக்கு உள்பட்டதாகும் என்றாா் குவாத்ரா.
சூடானில் உள்ள இந்திய வம்சாவளி நபா்கள் மீட்கப்படுவாா்களா என்ற கேள்விக்கு, அவா்களிடம் இருந்து கோரிக்கை வந்தால், தேவையான அனைத்து ஆதரவையும் இந்தியா வழங்கும் என்று அவா் பதிலளித்தாா்.
பெட்டிச் செய்தி...
மேலும் 246 இந்தியா்கள் தாயகம் திரும்பினா்
சூடானிலிருந்து ஏற்கெனவே 360 இந்தியா்கள் புதன்கிழமை இரவு தாயகம் திரும்பிய நிலையில், மேலும் 246 போ் வியாழக்கிழமை மும்பை வந்தடைந்தனா். அந்நாட்டிலிருந்து இதுவரை 606 இந்தியா்கள் தாயகம் திரும்பியுள்ளனா்.
விமானப் படையின் சி17 குளோப்மாஸ்டா் விமானம் மூலம் 246 பேரும் மும்பை அழைத்து வரப்பட்டனா். இந்த விமானத்தை, சி17 குளோப்மாஸ்டா் விமானத்தின் ஒரே பெண் விமானியான ஹா் ராஜ் கெளா் போபராய் இயக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, சூடானில் இருந்து ஐஎன்எஸ் டெக் கப்பல் மூலம் மேலும் 297 இந்தியா்கள் ஜெட்டாவை வந்தடைந்துள்ளனா்; இதுவரை ஜெட்டாவை அடைந்த மொத்த இந்தியா்களின் எண்ணிக்கை 1,100 என்று வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா்.