ராகுல் காந்தி மக்களவையில் உரை 
இந்தியா

பாஜகவினர் பயப்பட வேண்டாம்; மோடி விரும்பினால் சிறை செல்கிறேன்: ராகுல் காந்தி

இன்று அதானி பற்றி பேசப்போவதில்லை. எனவே, எனது பாஜக நண்பர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

DIN

அதானி குறித்த பேச்சு பாஜகவினரை எரிச்சலூட்டியிருக்கிறது. ஆனால், இன்று அதானி பற்றி பேசப்போவதில்லை. எனவே, எனது பாஜக நண்பர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்றுத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

ராகுல் காந்தி தனது உரையைத் தொடங்கியதுமே தொழிலதிபர் அதானியின் பெயரைக் குறிப்பிட்டதற்கு  பாஜகவினர் முழக்கமிட்டனர். பாஜகவினரின் முழக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதனால் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து உரையாற்றிய ராகுல் காந்தி, கடந்த முறை அதானி பற்றி பேசியதால்தான் எனக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஒற்றுமை நடைப்பயணத்திற்குப் பிறகு எனக்கு ஆணவம் அகன்றுவிட்டது. இன்று என்னுடைய இதயத்தின் ஆழத்தில் இருந்து நான் பேசப்போகிறேன். மணிப்பூர் பற்றிதான் நான் பேசப்போகிறேன் என்று குறிப்பிட்டார்.

அதானி குறித்த பேச்சு பாஜகவினரை எரிச்சலூட்டியிருக்கிறது. ஆனால், இன்று அதானி பற்றி பேசப்போவதில்லை. எனவே, எனது பாஜக நண்பர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்குவதற்கு முதலில் நான் அச்சப்பட்டேன். ஆனால், இந்த நடைப்பயணத்தின்போது பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். இந்திய மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை நடைப்பயணம் கொடுத்தது. குமரி முதல் இமயம் வரையிலான எனது ஒற்றுமை நடைப்பயணம் நிறைவுபெறவில்லை. மீண்டும் தொடங்கும் என்றார்.

பாஜக ஆட்சி நடக்கும் கடந்த 10 ஆண்டுகளாக நான் அவதூறுக்கும் சிறுமைப்படுத்துதலுக்கும் ஆளாகி வருகிறேன். பிரதமர் நரேந்திர மோடி விரும்பினால் நான் சிறைக்குச் செல்லத் தயார் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்திய நாட்டின் ஒரு பகுதியாக மணிப்பூரை பிரதமர் மோடி கருதவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூரை இரண்டாக உடைத்துவிட்டார். இன்று வரை பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்லவில்லை. ஏனென்றால், இந்திய நாட்டின் ஒரு பகுதியாக அவர் மணிப்பூரைக் கருதவில்லை என்பதே. மணிப்பூரை கைவிட்டுவிட்டார். மணிப்பூருக்கு நானே சென்றேன். ஏன் பிரதமர் மோடி இன்னும் செல்லவில்லை என்றும் ராகுல் காந்தி பேசினார்.

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கூட பிரதமர் மோடி பேசவில்லை. இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள் என்று உணர்ச்சிப்பூர்வமாக ராகுல் காந்தி உரையாற்றினார்.

ராகுல் காந்தி உரைக்கு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்து அவையில் பேசினார். இதற்கு திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இதற்கு மத்தியில் ராகுல் தனது உரையை தொடர்ந்து வருகிறார்.

இதற்கிடையே, ராகுல் காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால், தொடர்ந்து உரையாற்றி வரும் ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசு மீது அடுக்கடுக்கான் குற்றச்சாட்டுகளை மிக ஆவேசமாக முன்வைத்து வருகிறார்.

இந்தியாவின் அடிப்படைக் கருத்தோட்டத்தையும் பாரம்பரியத்தையும் மத்திய அரசு அழித்துவிட்டது. மணிப்பூரில் ராணுவத்தைப் பயன்படுத்தினால் ஒரே நாளில் அமைதியைக் கொண்டுவரலாம். ராவணன் கூட மக்கள் பேச்சைக் கேட்டார். ஆனால் பிரதமர் மோடி கேட்கவில்லை என்றும் ராகுல் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி உரையாற்றும்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மக்களவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!

சிபிஐ வலையில் சிக்கிக்கொண்ட விஜய்! - செல்வப் பெருந்தகை | செய்திகள் : சில வரிகளில் | 12.1.26

SCROLL FOR NEXT