தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்குவது குறித்து விவாதிக்க கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை தொடங்கியுள்ளது.
முதல்வா் சித்தராமையா தலைமையில் நடைபெறும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.
துணை முதல்வர் டிகே சிவக்குமார், பாஜக சார்பில் முன்னாள் முதல்வர்கள் பி.எஸ். எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, மஜத தலைவர் எச்.டி. குமாரசாமி, பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, மக்களவை எம்.பி. சுமலதா அம்பரீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெறும் கூட்டத்தில் காவிரி நதிநீா் ஆணையத்தின் உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின்படி காவிரி பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கையை கர்நாடக அரசு மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
இதையும் படிக்க | சென்னை அருகே தண்டவாளத்தில் விரிசல்: 6 விரைவு ரயில்கள் தாமதம்!
முன்னதாக, தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி செய்வதற்காக 15 நாள்களுக்கு விநாடிக்கு 10,000 கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிடுமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் ஆக. 11ஆம் தேதி கா்நாடகத்துக்கு உத்தரவிட்டது.
இதனிடையே, கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை, 53 டிஎம்சியில் 15 டிஎம்சி தண்ணீர்தான் கர்நாடகம் திறந்துவிட்டுள்ளதாகவும் இதனால் காவிரியில் விநாடிக்கு 24,000 கன அடிதண்ணீரை திறந்துவிட கா்நாடகத்துக்கு உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்தது. அதனடிப்படையில் 3 போ் கொண்ட புதிய அமா்வு, தமிழக அரசின் மனுவை வெள்ளிக்கிழமை முதல் விசாரிக்கிறது.
தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்துவிடக் கூடாது என்று கர்நாடகத்தில் எதிர்க்கட்சிகளும் விவசாய அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.