ராஜஸ்தான்: முதல்வர் யார்? 5 எம்எல்ஏக்களின் ரகசிய கூட்டம்!
ராஜஸ்தானில் முதல்வர் யார் என்பதை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை.
ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார் என்கிற சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது கோட்டா பகுதி எம்.எல்.ஏ.க்கள் 5 பேரின் ரகசிய சந்திப்பு.
பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.
அதற்கிடையில் லலித் மீனா என்கிற சட்டப் பேரவை உறுப்பினரைச் சக உறுப்பினர் ஒருவர் நகரத்துக்கு வெளியே உள்ள விடுதிக்கு வரவழைத்துள்ளார். ஏற்கெனவே 4 சட்டப் பேரவை உறுப்பினர்கள் அங்கிருந்த நிலையில், லலித் மீனா வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
லலித் மீனாவின் தந்தை கட்சியிடம் புகார் தெரிவிக்கவே, அடுத்த நாள் லலித் மீனா மீண்டும் திரும்பியுள்ளார்.
இது குறித்து அம்மாநிலத்தின் பாஜக தலைவர், “யாரையும் தடுத்து நிறுத்தப்படவில்லை. எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ளனர். முதல்வர் யார் என்பது கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். கட்சியின் கவனிப்பாளர்கள் நியமிக்கப்பட்ட பிறகே அந்தக் கூட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பட்டியலில் வசுந்தரா ராஜே, மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் பெயர் அடிபடுவதாகத் தெரிகிறது.