குடிபோதையில் 5 வயது மகனைக் கொன்ற தந்தை கைது!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிபோதையில் தனது 5 வயது குழந்தையைக் கொன்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிகானப்பள்ளி கிராமத்தில் குடிபோதையில் தனது 5 வயது மகனைக் கொன்ற சந்தோஷ் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை குடிபோதையில் தனது 5 வயதான மகன் கதிரேசனை, தந்தை சந்தோஷ் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். குழந்தையின் தாயார் சுகன்யா கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இறந்து போன தன் மனைவியின் மீதிருந்த சந்தேகத்தினடிப்படையில் சந்தோஷ் தன் மகனைக் கொலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: கேரளம்: தற்கொலை செய்வதற்கு முன் தனக்குத்தானே இரங்கல் தெரிவித்துக்கொண்ட இளைஞர்
Advertisement
குற்றவாளியின் தந்தை தனது பேரனை சந்தோஷின் வீட்டில் சடலமாகக் கண்டெடுத்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை, இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சந்தோஷின் தந்தை மற்றும் மாமனார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.