ராஜஸ்தானில் சட்டம்- ஒழுங்கு சீர் செய்யப்படும்: பைரவா
ராஜஸ்தானில் புதிய முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணை முதல்வர் பேசியுள்ளார்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் தேர்வு செய்யப்பட்டுள்ள துணை முதல்வர்கள் இருவரில் ஒருவரான பிரேம் சந்த் பைரவா, மாநிலத்தின் சட்ட ஒழுங்கை சீர் செய்வதில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்ததாகவும் மக்கள் அந்த ஆட்சியைக் கைவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர், “சட்டம் மற்றும் ஒழுங்கைச் சீராக்க வேலை செய்யவுள்ளோம். பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முன்னணியில் இருந்தது. புதிய அர்சு அதனைச் சரி செய்வோம். சமூகத்தின் அனைத்து தரப்பினருக்காகவும் வேலை செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு துணை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட தியா குமாரியும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பைப் பலப்படுத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் பதவியேற்பு விழா டிச. 15-ம் தேதியன்று நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.