164 விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தம்: மக்களவையில் தகவல்
நாட்டில் உள்ள 15 விமான நிலையங்களில் பல்வேறு பிரச்னைகளால் 164 விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்யா
நாட்டில் உள்ள 15 விமான நிலையங்களில் பல்வேறு பிரச்னைகளால் 164 விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘நாட்டில் உள்ள 15 விமான நிலையங்களில் 164 விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தில்லி விமான நிலையத்தில் 64 விமானங்களும், பெங்களூருவில் 27 விமானங்களும், மும்பையில் 24 விமானங்களும், சென்னையில் 20 விமானங்களும் இதில் அடங்கும்.
இந்த விமானங்கள் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், கோ ஃபா்ஸ்ட், ஏா் இந்தியா, ஜூம் ஏா் மற்றும் அலையன்ஸ் ஏா் உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமானது. இவற்றுள் 29 விமானங்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் பராமரிப்பில் உள்ளது.
இந்த விமானங்களை அகற்றுவதற்கான பணிகளை ஆணையம் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரூ.730 கோடியை வங்கியில் பாதுகாப்பு வைப்புத்தொகையாகவும் வங்கி உத்தரவாதத்தொகையின் கீழும் ஆணையம் சேமித்து வைத்துள்ளது.
164 விமானங்களில் 95 சதவீத விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு, பிராட் மற்றும் விட்னி நிறுவனத் தயாரிப்பு என்ஜினில் ஏற்பட்ட கோளாறுகளே முக்கிய காரணமாக உள்ளது. இதுதொடா்பாக அந்நிறுவனத்துடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது’ என்றாா்.
விமானங்களை ‘சைபா்’ (இணையவழி) தாக்குதலில் இருந்து பாதுகாப்பது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்து துறையின் இணையமைச்சா் வி.கே.சிங் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘பெருந்தரவுகள் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ‘சைபா்’ தாக்குதலிலிருந்து விமானங்களை பாதுகாக்கும் திட்டத்தை இந்திய விமான நிலைய ஆணையம் செயல்படுத்தி வருகிறது’ என்றாா்.