இந்தியா

அதானி விவகாரத்தில் பிரதமரை விமர்சித்த கோடீஸ்வரர் - யார் தெரியுமா?

DIN

அதானி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த கோடீஸ்வரர் ஜியார்ஜ் சோரஸுக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.

அண்மையில் அதானி குழுமப் பங்குகள் தொடர்பாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கை இந்திய பங்குச் சந்தையில் புயலை கிளப்பியது. அதானி குழுமத்தின் பங்குகளை உயர்த்தி காண்பித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதானி விவகாரத்தினை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் கையிலெடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அமளியில் ஈடுபட்டனர். மேலும், அதானி குழும முறைகேடு புகார் தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தியும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை வலியுறுத்தியும் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கேள்விக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜியார்ஜ் சோரஸ் கூறியதும், அதற்கு ஜியார்ஜ் சோரஸின் பிரதமர் மீதான இந்த விமர்சனம் இந்தியாவின் மீதானத் தாக்குதல் என மத்திய அரசு சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

யார் இந்த ஜியார்ஜ் சோரஸ்?

92 வயதான ஜியார்ஜ் சோரஸ் அமெரிக்க பணக்காரர்களில் ஒருவர் ஆவார். அவர் ஹங்கேரியில் உள்ள செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். நாஜிக்களின் வருகைக்குப் பிறகு ஹங்கேரியில் இருந்து அவரது குடும்பம் இடம்பெயர்ந்தது. பின்னர், 1947 ஆம் ஆண்டு அவரது குடும்பம் லண்டனுக்கு இடம்பெயர்ந்தது. அங்கு அவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸில் தத்துவம் படித்துள்ளார்.

படிப்பினை முடித்த பிறகு 1956 ஆம் ஆண்டு சோரஸ் நியூயார்க்குக்கு இடம் பெயர்ந்தார். அங்கு அவர் யூரோப்பியன் செக்யூரிட்டீஸ் என்ற நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார்.

1973 ஆம் ஆண்டு வர்த்தக உலகத்தில் பல முக்கியமான முடிவுகளை எடுத்ததால் அவரது சொத்து மதிப்பு அதிகரித்தது. பங்குச் சந்தையில் வாடிக்கையாளர்களின் பணத்தினை 1969 முதல் 2011 ஆம் ஆண்டு வரை நிர்வகித்துள்ளார். இதன் மூலம் 1 பில்லியன் டாலர் அவர் லாபம் ஈட்டினார். இங்கிலாந்து வங்கி ஒன்றுமில்லாமல் பணநெருக்கடிக்கு ஆளாக்கியவர் எனவும் இவர் அறியப்படுகிறார்.

புளூம்பெர்க் நிறுவனத்தின் தரவுகளின் படி இவரது சொத்து மதிப்பு 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜோ பைடன் போன்ற தலைவர்களை ஆதரித்துள்ளார்.

1997-ல் தாய்லாந்தில் ஏற்பட்ட நிதிநெருக்கடிக்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுபவர்.

அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி, அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும் என பிரதமரை விமர்சித்து சர்ச்சைக்கு ஆளானார்.

எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் ஜனநாயகம் மீண்டும் வர வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என ஜியார்ஜ் சோராஸ் பேசியுள்ளார்.

இவரது பிரதமர் மீதான விமர்சனத்துக்கு  பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தியாவின் மீதான தாக்குதலை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் எனவும், இந்திய ஜனநாயகத்தில் வெளிநாட்டு சக்திகள் தலையிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜியார்ஜ் சோரஸ் ஒரு பொருளாதார போர் குற்றவாளி என கடுமையாக சாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

தில்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!

ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து: நோயாளி கருகிப் பலி!

SCROLL FOR NEXT