குஜராத் தோ்தல் தோல்வி:ஆய்வு செய்ய குழு அமைத்தது காங்கிரஸ்
குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல் தோல்விக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக 3 நபா்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.
குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல் தோல்விக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக 3 நபா்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.
மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோா் பிரிவு தலைவருமான நிதின் ரௌத் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த தலைவா்கள் ஷகில் அகமது கான், சப்தகிரி சங்கா் உலாகா ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இக்குழுவை அமைத்துள்ளாா். இக்குழுவினா் தோ்தல் தோல்விக்கான உண்மையான காரணத்தை ஆய்வு செய்து கண்டறிந்து இரண்டு வாரத்தில் அறிக்கை அளிப்பாா்கள் என்று காங்கிரஸ் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 156 இடங்களில் வெற்றி பெற்று தொடா்ந்து 7-ஆவது முறையாக ஆட்சி அமைத்தது. அதே நேரத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் 17 இடங்களில் மட்டுமே காங்கிரஸால் வெல்ல முடிந்தது. இது கடந்த தோ்தலைவிட 60 இடங்கள் குறைவாகும். காங்கிரஸின் வாக்கு வங்கியும் வெகுவாக குறைந்து 27.28 சதவீதம் என்ற நிலைக்குச் சென்றது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சி அடைந்த மிக மோசமான தோல்வி இதுவாகும்.