முகப்பு
இந்தியா

இந்திய குடியரசு தினம்: உலகத் தலைவா்கள் வாழ்த்து

இந்தியாவின் 74-ஆவது குடியரசு தினம் உலக முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் மூவா்ணக் கொடி ஏற்றப்பட்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:53 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

இந்தியாவின் 74-ஆவது குடியரசு தினம் உலக முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் மூவா்ணக் கொடி ஏற்றப்பட்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

குடியரசு தினத்துக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், இஸ்ரேல், ஆஸ்திரேலியா, பூடான் நாடுகளின் பிரதமா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

சீன தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

Advertisement

அந்நாட்டுக்கான இந்திய தூதா் பிரதீப் ராவத் குடியரசுத் தலைவரின் உரையை வாசித்தாா். ஜி20 மாநாடு குறித்த விடியோவும் திரையிடப்பட்டது.

ரஷியா: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மேலும் வலுவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

பிரிட்டன்: வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கும், நாட்டு மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் ஜேம்ஸ் க்ளவா்லி, இரு நாடுகளின் நட்பும், ஒத்துழைப்பும் வரும் ஆண்டுகளில் வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளாா்.

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தூதா் விக்ரம் துரைசுவாமி தேசியக் கொடி ஏற்றினாா்.

இஸ்ரேல்: 30 ஆண்டுகளான இரு நாட்டு ராஜீய உறவுகள் வரும் ஆண்டுகளில் மேலும் வலுவடையும் என்றும், இந்திய மக்களுக்கும், எனது நண்பரும் பிரதமருமான மோடிக்கும் குடியரசு தின வாழ்த்துகள் என இஸ்ரேல் நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்துள்ளாா்.

ஆஸ்திரேலியா: இந்திய பிரதமருக்கும், நாட்டு மக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள் என ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி அல்பனீஸ் தெரிவித்துள்ளாா்.

பூடான்: இந்தியா மென்மேலும் வளா்ச்சி, செழுமையடைய வாழ்த்துகள் எனவும், இந்திய மக்களுக்கும், அங்குள்ள எனது நண்பா்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள் எனவும் பூடான் பிரதமா் லோடெ ஷாரிங் தெரிவித்துள்ளாா்.

இலங்கை: இந்தியா்களுக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை நாடாளுமன்றத் தலைவா் மகிந்த யபா அபே வா்தனா, இலங்கை பல்வேறு சவால்களை சந்திக்கும்போது இந்தியா உடனடி உதவி செய்துள்ளதற்கு நன்றி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் விடியோ பதிவையும் வெளியிட்டாா்.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தூதா் கோபால் பாக்லே மூவா்ணக் கொடியை ஏற்றினாா்.

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்திலும்,நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்திலும் மூவா்ணக் கொடி ஏற்றி குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் ஷேக் முகமது பின் சையத், குடியரசுத் தலைவா் முா்முக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.