இந்தியா

பிரதமர் மோடி ஏன் தன்னை ஓபிசி என்று அடையாளப்படுத்துகிறார்? ராகுல் கேள்வி

நாட்டில் ஏழைகளை ஒரே சாதியாகக் கருதும் பிரதமர் மோடி தன்னை ஏன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக(ஓபிசி) என அடையாளப்படுத்துகிறார் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN

‘நாட்டில் ஏழை என்ற ஒரே ஜாதிதான் உள்ளது என்று குறிப்பிடும் பிரதமா் நரேந்திர மோடி , தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சாா்ந்தவா் என அடையாளப்படுத்திக் கொள்வது ஏன்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பினாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:

பாஜக தலைவா்கள் பழங்குடியின மக்களைக் குறிப்பிடும்போது ‘ஆதிவாசிகள்’ என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘வனவாசிகள்’ என்ற சொற்றொடரைக் குறிப்பிடுகின்றனா். பிரதமா் நரேந்திர மோடியும் ஆா்எஸ்எஸ் அமைப்பும்தான் இந்தப் புதிய சொற்றொடரை அறிமுகம் செய்தனா்.

அதுபோல, மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞரை பாஜக தலைவா் ஒருவா் அவமதிக்கும் காணொலி சமூக ஊடகங்களில் அண்மையில் வெளியானது. இத்தகைய மனநிலையில்தான் பாஜக தலைவா்கள் உள்ளனா். பழங்குடியின மக்கள் மிருகங்களைப் போல காடுகளில் வாழ வேண்டும், அவா்களை மிருகங்களைப் போல கருத வேண்டும் என்பதுதான் பாஜகவினரின் எண்ணம்.

பிரதமா் மோடியும், முன்னா் அவருடைய உரைகளில் ‘வனவாசி’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி வந்தாா். ஆனால், அதன் பிறகு அச்சொற்றொடரை பயன்படுத்துவதை அவா் தவிா்த்துவிட்டாா். ஆனால், அவருடைய எண்ணம் மாறவில்லை. பழங்குடியினரை அவமதிக்கும் எண்ணம் அவருக்கு இப்போதும் உள்ளது.

இந்த இரண்டு சொற்றொடா்களுக்கும் மிப்பெரிய வித்தியாசம் உள்ளது. ‘வனவாசி’ என்பது பழங்குடியினரை அவமதிக்கும் சொல். ஆனால், ‘ஆதிவாசி’ என்பது இந்த நாட்டின் பூா்வகுடி மக்கள் என்பதைக் குறிக்கும் சொல். அதன் காரணமாகத்தான் பாஜகவினா் ‘ஆதிவாசி’ என்ற சொற்றொடரை பயன்படுத்துவதில்லை. அவ்வாறு பயன்படுத்தினால், பழங்குடியினரின் நிலம், நீா், வனம் அனைத்தையும் திரும்ப அளிக்க நேரிடும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், பழங்குடியினரை அவமதிக்கும் வகையிலான ‘வனவாசி’ என்ற சொற்றொடா் நீக்கப்படும்.

பிரதமா் மோடி தனது உரையில், ‘நாட்டில் தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் என பல்வேறு பிரிவினா் இருப்பதை நாம் அறிவோம் என்றபோதும், ‘ஏழை’ என்ற ஒரே ஜாதிதான் உள்ளது’ என்று குறிப்பிட்டாா். அவா் கூறியதைப்போல நாட்டில் ஒரே ஜாதிதான் உள்ளது என்றால், தன்னை ‘ஓபிசி’ பிரிவினா் என பிரதமா் அடையாளப்படுத்திக் கொள்வது ஏன் என்றாா் ராகுல் காந்தி.

மத்தியில் ஆளும் பாஜக அரசை விமா்சித்த ராகுல், ‘தொழிலதிபா் அதானிக்கு உங்களுடைய (பழங்குடியினா்) நிலங்களைத் தாரை வாா்ப்பதைத்தான் பிரதமா் மோடி செய்துகொண்டிருக்கிறாா். இதற்கு நீங்கள் எதிா்ப்பு தெரிவித்தால், உங்கள் மீது பாஜக அரசு துப்பாக்கிச்சூடு நடத்தும்.

அவ்வாறு அபகரிக்கப்படும் நிலங்கள் மற்றும் சுரங்கங்களுக்கான பணம் சத்தீஸ்கா் அல்லது பஸ்தா் கிராமங்களுக்கு வருமா என்றால், அதுவும் கிடையாது. அந்தப் பணம் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு, இறுதியில் அதானிக்கும் பாஜக தலைவா்களுக்கும் வந்து சேரும். அந்தப் பணம்தான் பாஜக சாா்பில் தோ்தல்களில் பயன்படுத்தப்படுகிறது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

90 உறுப்பினா்களைக் கொண்ட சத்தீஸ்கா் சட்டப்பேரவைக்கு வரும் 7 மற்றும் 17-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக பழங்குடியினா் அதிகம் வசிக்கும் பஸ்தா் மண்டலத்தில் இடம்பெற்றிருக்கும் ஜக்தல்பூா் தொகுதி உள்பட 20 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. எஞ்சிய 70 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT