இஸ்ரேலில் நடைபெற்று வரும் போரில் சிக்கிய கேரளத்தை சேர்ந்த பெண் செவிலியர் காயமடைந்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஆளும் ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது சனிக்கிழமை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், 350-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். 1,900-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 1,600-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த நிலையில், ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வரும் பகுதியில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளத்தை சேர்ந்த ஷீஜா ஆனந்த்(வயது 41) என்ற பெண் இஸ்ரேலில் கடந்த 7 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகிறார். ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வரும் பகுதியில் இவர் தங்கி பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனது கணவருடன் தொலைபேசியில் பாதுகாப்பாக இருப்பதாக ஷீஜா பேசிக் கொண்டு இருக்கும்போதே பயங்கர சத்தத்துடன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் ஷீஜாவின் கணவரை அழைத்த சக கேரள செவிலியர் ஒருவர், ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் ஷீஜா படுகாயமடைந்துள்ளதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மற்றொரு அறுவை சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு ஷீஜா மாற்றப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள ஷீஜாவின் குடும்பத்தினர் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக அரசை நாடியுள்ளனர்.
ஷீஜாவின் கணவர் புணேவில் பணிபுரிந்து வரும் நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இஸ்ரேலில் சிக்கியுள்ள 18,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.