எந்த சாதனைக்கும் வயது ஒரு பொருட்டே அல்ல. வயதும் முதுமையும் உடலுக்குத் தானே தவிர, அறிவுக்கும் உழைப்புக்கும் இல்லை என்பதை உணர்த்திய மூதாட்டி கார்த்தியாயினி(101) வயது மூப்பு காரணமாக புதன்கிழமை காலமானார்.
கேரள மாநிலத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 18.5 லட்சம் பேர் எழுத்தறிவற்றவர்களாக இருப்பது தெரியவந்ததை அடுத்து, இளமைக் காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கேரளம் நூறு சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலமாக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக 'அக்ஷரா லக்ஷம்' என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த எழுத்தறிவு தேர்வில் கலந்து கொண்ட 43,330 பேரில் 42,933 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் ஆலப்புழை மாவட்டம், செப்பாட் கிராமத்தைச் சேர்ந்த 96 வயது காத்தியாயினி அம்மாள் 100-க்கு 98 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இவர், எழுத்துத் தேர்வில் 40-க்கு 38 மதிப்பெண்களும், கணிதம் மற்றும் வாசித்தல் தேர்வில் முழு மதிப்பெண்களும் பெற்றார். இதன் மூலம் கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்தார்.
குழந்தைகள் படிப்பதைப் பார்க்கும் போது தமக்கும் ஆசை ஆசையாக இருந்ததாகவும், சிறு வயதில் கல்வி கற்க தனக்கு வாய்ப்புக் கிட்டவில்லையென்றும், அடுத்து, தான் கணினி பயிற்சி பெற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் மிகவும் வயதான மாணவியான அவருக்கு அம்மாநில முதல்வர் நேரில் சென்று சான்றிதழ் வழங்கி வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து கார்த்தியாயினி அம்மாவை கௌரவிக்கும் வகையில் காமென்வெல்த் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளில் தொலைதூர கல்வியை மேம்படுத்தும் வகையில் கல்விக்கான நல்லெண்ணத் தூதுவராக நியமித்தது காமென்வெல்த் அமைப்பு.
இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக கார்த்தியாயினி(101) புதன்கிழமை காலமானார்.
இவரது மறைவுக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.