மேற்கு தில்லியில் வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திலக் நகர் பகுதியில் அரசுப் பள்ளியின் அருகே இளம்பெண்ணின் சடலத்தை போலீஸார் நேற்று காலை கைப்பற்றினர். 30 வயதுடைய அந்த பெண்ணின் உடலில் சித்திரவதை செய்யப்பட்ட அடையாளங்கள் இருந்தன.
சிசிடிவி கேமரா உதவியுடன் குற்றவாளியைக் கண்டறிந்த போலீஸார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக குர்பிரீத் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்ததில் இளம்பெண் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த லீனா பெர்கர் என்பது தெரியவந்தது. இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை சந்திக்க குர்பிரீத் அடிக்கடி சுவிட்சர்லாந்து சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், லீனாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாக சந்தேகித்து அவரை கொன்றுவிடத் திட்டமிட்டுள்ளார். அதன்படி அக்.11-ம் தேதி இந்தியா வந்த லீனாவை அழைத்துச்சென்று கை, கால்களைக் கட்டிப்போட்டு சித்திரவதை செய்து கொலை செய்துள்ளார். கார் ஒன்றில் உடலைப் மறைத்துவைத்த நிலையில் துர்நாற்றம் வெளியே வர ஆரம்பித்ததும் சாலையோரம் வீசிவிட்டுத் தப்பியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட குர்பிரீத்திடம் பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தீவிரமாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.