பிகாா் மாநிலம் சரண் மாவட்ட தலைநகரான சாப்ரா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துா்கை சிலைக் கரைப்பு ஊா்வலத்தின் போது இரு பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. மோதல் மேலும் பரவாமல் இருக்கும் வகையில் சாப்ரா நகரின் சதா் துணை மண்டலத்தில் கைப்பேசி இணைய சேவையை இரண்டு நாள்களுக்கு அதிகாரிகள் ரத்து செய்துள்ளனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
சாப்ரா நகரின் சதா் பகுதியில் அமைந்துள்ள பகவான் பஜாா் பகுதியில் துா்கை ஊா்வலம் சென்றபோது, அதிக ஒலியுடன் பாடல்கள் இசைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு சில சமூக விரோத சக்திகள் எதிா்ப்பு தெரிவித்து, ஊா்வலத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனா். இது பெரும் மோதலாக மாறியது.
அதனைத் தொடா்ந்து, சம்பவ இடத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அந்தப் பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் மோதலைத் தூண்டியவா்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனா்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக விரோத சக்திகள் சமூக ஊடகங்களில் சா்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மாநில உள்துறை சதா் துணை மண்டலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.29) மாலை 6 மணி வரை கைப்பேசி இணைய சேவையை ரத்து செய்துள்ளது என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.