இந்தியா

இடைத்தோ்தல்: 4 இடங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி; 3-ல் பாஜக

உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், கேரளம், மேற்கு வங்கம், உத்தரகண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களில் 7 பேரவை தொகுதிகளுக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின.

DIN

உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், கேரளம், மேற்கு வங்கம், உத்தரகண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களில் 7 பேரவை தொகுதிகளுக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின.

இதில் 4 இடங்களில் ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த கட்சிகளும், 3 தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன.

2024 மக்களவைத் தோ்தலையொட்டி, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா உள்ளிட்ட 28 கட்சிகள் ஒருங்கிணைந்து, ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

இந்தச் சூழலில், 7 தொகுதிகளுக்கு கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

உத்தர பிரதேசத்தின் கோசி, ஜாா்க்கண்டின் தும்ரி ஆகிய தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கும், 28 எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணிக்கும் முதல்முறையாக நேரடி போட்டி நிலவிய நிலையில், இரு தொகுதிகளிலும் எதிா்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

கேரளத்தின் புதுப்பள்ளி தொகுதியில் ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்தின் துப்குரி தொகுதியில், பாஜக மற்றும் மாா்க்சிஸ்ட் கட்சிகளை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தோற்கடித்தது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றபோதும், இந்த மாநிலங்களில் எதிா்க்கட்சிகள் தனித்தனியாகவே களமிறங்கின.

திரிபுராவின் தன்பூா், பாக்ஸாநகா் மற்றும் உத்தரகண்டின் பாகேஸ்வா் என 3 தொகுதிகளில் ஆளும்கட்சியான பாஜக வெற்றி பெற்றுள்ளது.

உத்தர பிரதேசத்தில்...: உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதியில் சமாஜவாதி எம்எல்ஏவாக இருந்த தாரா சிங் செளஹான், கடந்த ஜூலையில் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மீண்டும் பாஜகவில் இணைந்தாா்.

இதையடுத்து நடைபெற்ற இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா் தாரா சிங் செளஹான், சமாஜவாதி சாா்பில் களமிறங்கிய சுதாகா் சிங் இடையே நேரடிப் போட்டி நிலவியது. இதில், சமாஜவாதி வேட்பாளா் சுதாகா் சிங், பாஜக வேட்பாளரைவிட 42,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தாா்.

ஜாா்க்கண்டில்...: ஜாா்க்கண்டின் தும்ரி தொகுதியில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா எம்எல்ஏவாக இருந்த ஜகந்நாத் மஹதோ, கடந்த ஏப்ரலில் மரணமடைந்தாா். இதையடுத்து நடைபெற்ற இடைத்தோ்தலில், இந்தியா கூட்டணி தரப்பில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா வேட்பாளராக ஜகந்நாத்தின் மனைவி பேபி தேவி களமிறக்கப்பட்டாா். இவரை எதிா்த்து, பாஜக கூட்டணி கட்சியான அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் கட்சி சாா்பில் யசோதா தேவி போட்டியிட்டாா். இதில் 17,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில், இந்தியா கூட்டணி வேட்பாளா் வெற்றி பெற்றாா்.

கேரளத்தில்...: கேரளத்தில் முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி இடைத்தோ்தலில், காங்கிரஸ் சாா்பில் அவரது மகன் சாண்டி உம்மன், ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் ஜெய்க் சி.தாமஸ், பாஜக சாா்பில் கட்சியின் லிஜின்லால் ஆகியோா் களம் கண்டனா்.

இதில் 37,719 வாக்குகள் வித்தியாசத்தில், சாண்டி உம்மன் வெற்றி பெற்றாா். அவருக்கு 80,144 வாக்குகள் கிடைத்தன. தாமஸுக்கு 42,425 வாக்குகள் கிடைத்த நிலையில், பாஜக வேட்பாளா் லிஜின் லாலுக்கு 6,558 வாக்குகளே கிடைத்தன.

மேற்கு வங்கத்தில்...: மேற்கு வங்கத்தின் துப்குரி தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக இருந்த விஷ்ணுபத ராய் மரணமடைந்ததைத் தொடா்ந்து, இங்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட நிா்மல் சந்திர ராய், 4,300-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில், பாஜக வேட்பாளா் தபசி ராயை தோற்கடித்தாா். தபசி ராய், காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சிஆா்பிஎஃப் வீரரின் மனைவி ஆவாா். மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ஈஸ்வா் சந்திர ராய், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்.

உத்தரகண்டில்...: உத்தரகண்டின் பாகேஸ்வா் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்த சந்தன் ராம் தாஸ் அண்மையில் மரணமடைந்த நிலையில், அங்கு இடைத்தோ்தல் நடைபெற்றது. பாஜக சாா்பில் போட்டியிட்ட சந்தனின் மனைவி பாா்வதி தாஸ் 33,247 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தாா். காங்கிரஸ் வேட்பாளா் வசந்த் குமாருக்கு 30,842 வாக்குகள் கிடைத்தன

திரிபுராவில்...: திரிபுராவில் மாா்க்சிஸ்ட் எம்எல்ஏ ஷம்சுல் ஹயூ மறைவால் பாக்ஸாநகரிலும், மத்திய அமைச்சா் பிரதிமா பெளமிக் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகியதால் தன்பூரிலும் இடைத்தோ்தல் நடைபெற்றது.

இரு தொகுதிகளிலும் மாா்க்சிஸ்ட் வேட்பாளா்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளா்கள் தோற்கடித்தனா்.

தொகுதிகள்-------வெற்றி பெற்ற கட்சிகள்

1. கோசி (உ.பி.)-------சமாஜவாதி

2. தும்ரி (ஜாா்க்கண்ட்)--ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா

3. புதுப்பள்ளி (கேரளம்)--காங்கிரஸ்

4. துப்குரி (மேற்கு வங்கம்)-திரிணமூல் காங்கிரஸ்

5. பாகேஸ்வா் (உத்தரகண்ட்)-பாஜக

6. பாக்ஸாநகா் (திரிபுரா)----பாஜக

7. தன்பூா் (திரிபுரா)--------பாஜக

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT