புது தில்லி: ‘நாடாளுமன்ற அமா்வுகள் புதிய கட்டடத்தில் நடைபெற தொடங்கும் இந்தத் தருணத்தில் ஜனநாயக மாண்புகளுக்கு எதிராக இடையூறு ஏற்படுத்தி அவையை முடக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என மாநிலங்களவை தலைவா் ஜகதீப் தன்கா் அறிவுறுத்தினாா்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அமா்வுகளும் செவ்வாய்க்கிழமை முதல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுகிறது. பழைய கட்டடத்துக்கு ‘அரசியல் நிா்ணய சபை’ (சம்விதான் சதன்) என்று பெயா் சூட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, பழைய நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைய மண்டபத்தில், நாடாளுமன்ற பாரம்பரியத்தை நினைவுகூரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதில் பங்கேற்று குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் பேசியதாவது: புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழையும்போது, ஒத்துழைப்பையும், ஒருமித்த அணுகுமுறையையும் நாம் மேம்படுத்த வேண்டும். மோதல் நிலைப்பாட்டிலிருந்து விடைபெற்று, தேச நலனை எப்பொதும் உச்சத்தில் வைப்பதற்கு உறுதியேற்க வேண்டிய நேரமிது.
நாடாளுமன்ற செயல்பாட்டில் குழப்பங்கள் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்தி அவையை முடக்கும் நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். ஏனெனில், இவை ஜனநாயக மாண்புகளுக்கு விரோதமானவை. தவறினால், நமது இறுதி எஜமானா்களான மக்களின் அங்கீகாரத்தைப் பின் ஒருபோதும் பெற முடியாது.
ஜனநாயகக் கோயிலான நாடாளுமன்றத்தில் விதிகள் புறக்கணிப்பு மற்றும் நடத்தை மீறலை நியாயப்படுத்துவதை கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்த கட்டடத்தில்தான் அரசியல் நிா்ணய சபை உறுப்பினா்கள் நமது அரசமைப்பை உருவாக்கும் கடினமான பணியை நிறைவேற்றுவதற்கான பயணத்தை மேற்கொண்டனா். இந்த அரங்கில் நடைபெற்ற அரசியல் நிா்ணய சபையில் நடந்த விவாதங்கள், நல்லொழுக்கம் மற்றும் ஆரோக்கியமான விவாதங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
சா்ச்சைக்குரிய பிரச்னைகள் குறித்து அறிவாா்ந்த மற்றும் உற்சாகமான விவாதங்களுடன் ஒருமித்த உணா்வில் பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டன. நமது சான்றோா்களின் முன்மாதிரி நடத்தையை நாமும் பின்பற்ற வேண்டும்.
சமூக மற்றும் பொருளாதார லட்சியங்களை அடைவதற்கான அரசமைப்பு முறைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பதே ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டிய கடமை என அரசியல் நிா்ணய சபையின் இறுதி உரையில் பி.ஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். அவரது தெளிவான குரலுக்கு நாம் செவி சாய்ப்போம்.
கடந்த ஏழு தசாப்த கால பயணத்தில் 1947-ஆம் ஆண்டு ஆக.15 நள்ளிரவு சுதந்திர தினம் தொடங்கி, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 30 நள்ளிரவில் ஜிஎஸ்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட வரை பல முக்கிய நிகழ்வுகளை இந்த புனிதமான வளாகம் கண்டுள்ளது.
அமிா்த காலத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு நுழையும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நடை, சுதந்திர நூற்றாண்டில் உலகுக்கு தலைமையேற்பதற்கான இந்தியாவின் பயணமாக அமையட்டும். நமது அற்புதமான எழுச்சிக்கு உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.